அரசாங்கம், புதிதாக வரைவு செய்துள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு' வடக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கொண்டு வரத் தயாராவது தற்போதுள்ள சட்டத்தை விடவும் பாரதூரமான ஒரு சட்டமாகும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
"பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்காக என ஒரு சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்பதே வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவிட்டு, அதைவிடவும் ஆபத்தான சட்டத்தைக் கொண்டு வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார்.
2026 ஜனவரி 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். இதன்போது, தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜே.வி.பி, கடந்த காலங்களில் இவ்வாறான சட்டமூலங்களுக்கு எவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
"இதற்கு முன்னர் இரண்டு முறை இவ்வாறான சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டன. அந்தச் சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி கட்சியினர் எம்மை விடவும் மேலாக நின்று கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக வேறு எந்தச் சட்டமும் கொண்டு வரப்படக்கூடாது என்றும் கூறினார்கள். நாம் அந்தச் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட வராமல் வேறு சட்டம் கொண்டு வருவது தவறு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்" என அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தமடன் கைகோர்த்த ஜே.வி.பி, இன்று தனது நிலைப்பாட்டை முற்றாக மாற்றியுள்ளதாக சுமந்திரன் குற்றம் சுமத்தினார். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
"பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டம் எதுவும் அவசியமில்லை என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். புதிய சட்டமூலத்தில் உள்ள சில விடயங்கள் தற்போதைய சட்டத்தை விடவும் பயங்கரமானவை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த புதிய சட்டமூலம் தொடர்பாக பொதுமக்கள் தமது கருத்துக்களை எதிர்வரும் பிப்ரவரி 28ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக பெப்ரவரி 28 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் அது குறித்து ஆலோசனைகளை வழங்க முடியும். பொதுமக்கள் இதனை உன்னிப்பாக அவதானித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு மாத காலம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்த போதிலும், சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு இறுதிச் சட்டம் அல்ல என்றும், மக்களின் கருத்துக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள ஒரு வரைவு மாத்திரமே என்றும் அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


