காண்பதற்காக கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் ஆய்வகப் பரிசோதனையின் போது பரிசோதிக்கப்பட்ட 56 சாரதிகளில் 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் இந்த நடமாடும் ஆய்வகப் பரிசோதனை ஆரம்பமானது. இதன்போது எழுமாறாக (Randomly) தெரிவு செய்யப்பட்ட 56 சாரதிகளில் 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 சாரதிகளும் ஐஸ், ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட சிறுநீர் மாதிரிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் குறித்த சாரதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சாரதிகளில் 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டமையானது ஒரு சிக்கலான நிலைமை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது சில சாரதிகள் பல்வேறு தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி வீதிகளைத் தவிர்த்து, பரிசோதனைகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது அவதானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே, பஸ் உரிமையாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் இருந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனைகள், இனிவரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் என்றும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து இடம்பெறும் என்பதோடு அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


