மே தினக் கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளன. ஆளுங்கட்சியும் மாவட்ட ரீதியில் மே தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகளை நடத்தவுள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. "எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்களை ஒரே இடத்திற்கு அழைத்து வர நாங்கள் விரும்பவில்லை" என்று கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய எதிர்க்கட்சிகள் சிலவும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மே தினப் பேரணிகளை நடத்த வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி (UNP) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து மே தினப் பேரணியை நடத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை மறுத்துள்ளது. "மே தினம் பௌர்ணமி போயா தினத்தில் விழுந்துள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சி தனியாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடனோ எந்தவொரு மே தினப் பேரணியையும் நடத்தாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) பௌர்ணமி தினத்தைக் காரணம் காட்டி அரசியல் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளது. மே தினத்தில் கட்சி மத வழிபாடுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். எவ்வாறாயினும், மே 22 ஆம் திகதி இலங்கை குடியரசானதன் 34 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இம்முறை பேரணியை மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பி.டி. சிறிசேன மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதுடன், போயா தினம் என்பதால் இம்முறை ஊர்வலத்தைத் தவிர்க்க கட்சி முடிவு செய்துள்ளது.
இதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சி (FLSP) இம்முறை ஊர்வலம் மற்றும் பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது. "எமது ஊர்வலம் மருதானையில் ஆரம்பமாகி கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி நடைபெறும்" என அக்கட்சியின் கல்வி விவகாரச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.


