பீரிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு இடையில் மோதல் நிலவுவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸாரை அரசியலில் இருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் (IODPP Police) யூடியூப் தளம் ஊடாக அதன் செயற்பாட்டாளர் அஜித் தர்மபால இன்று (22) இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
சதி முயற்சி குறித்த குற்றச்சாட்டு:
நாட்டிற்காக ஒன்றிணைந்து செயற்படும் ஷானி அபேசேகர மற்றும் திலீப பீரிஸ் ஆகிய இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபரே இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாக அஜித் தர்மபால குற்றம் சுமத்தியுள்ளார்.
166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வாதி தரப்பு சார்பாக முன்னிற்பவர்களிடையே மோதல் நிலவுவதாகக் காண்பிக்க சட்டமா அதிபர் முயற்சிக்கின்றார்.
தற்போதைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர், ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக அவரது சட்ட ஆலோசகர் போன்று செயற்படுகின்றாரோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் திட்டமிட்டுத் தாமதப்படுத்தவே சட்டமா அதிபர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மேலதிகமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வழக்கைத் தாமதப்படுத்தும் 'MLA' உத்தி?
இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சனத் பாலசூரிய தனது முகநூல் பதிவில், விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் பரஸ்பர சட்ட உதவி (Mutual Legal Assistance – MLA) கோரும் முறைமையை இதுவரை பின்பற்றியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தினால் (University of Wolverhampton) ரணில் விக்ரமசிங்கவிற்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழைப்பிதழின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றது.
இவ்வாறான நிலையில், அதே விடயத்திற்காக சட்டமா அதிபரும் மற்றுமொரு 'MLA' கோரிக்கையை அனுப்பத் தயாராகி வருவது வழக்கை இழுத்தடிக்கும் ஒரு தந்திரோபாயம் எனத் தெரியவருகின்றது.
சரத் பத்திரணவின் கருத்து:
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சரத் பத்திரண பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"MLA ஊடாகப் பல்கலைக்கழகத்திடம் வினவுமாறு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தார். ரணிலின் ஆதரவாளர்களைத் தவிர்ந்த ஏனையோர், இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு உத்தி என்றே கருதுகின்றனர்.
ஏனெனில், ஒரு MLA கோரிக்கைக்குப் பதில் கிடைக்க மாதக்கணக்கில் அல்லது வருடங்களாகக் கூட ஆகலாம். குற்றப்புலனாய்வுத் திணைக்களக் குழுவினர் சட்டமா அதிபருக்குத் தெரிவிக்காமல் லண்டன் சென்றமைக்கும் இந்தச் சந்தேகமே காரணமாகும்.
பொலிஸார் ஒருபுறம் MLA அனுப்பியுள்ள நிலையில், சட்டமா அதிபரும் மீண்டும் அவ்வாறே செய்ய முற்படுவது திட்டமிட்ட காலதாமதம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றது."
சட்டமா அதிபரின் நடைமுறைக்கு ரணில் தரப்பு எதிர்ப்பு: வழக்கில் புதிய திருப்பம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், நிறுவப்பட்ட 'பரஸ்பர சட்ட உதவி' (Mutual Legal Assistance - MLA) ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் குழு சவால் விடுத்துள்ளது.
இந்த விசாரணைகளின் நம்பகத்தன்மை மற்றும் முழுமைத்தன்மை குறித்து இதன் மூலம் ரணில் தரப்பு பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்ட ஏற்பாடுகள் மீறப்பட்டுள்ளதா?
குற்றவியல் வழக்கு நடைமுறைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தெளிவான பொறிமுறையை வழங்கும் 'குற்றவியல் விடயங்கள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தின்' 13ஆம் பிரிவை சட்டமா அதிபர் அலுவலகம் தவிர்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சட்டப்பிரிவின் கீழ், இலங்கை அதிகாரிகளுக்குப் பின்வரும் விடயங்களுக்காக வெளிநாட்டு நீதிமன்றங்கள் அல்லது நிர்வாக அமைப்புகளின் உதவியைப் பெற அனுமதி உண்டு:
வெளிநாட்டு அதிகார எல்லைகளிலிருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளல்.
ஆவணங்கள் மற்றும் பயணப் பதிவுகளை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளல்.
ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், உள்நாட்டிலுள்ள முழுமையற்ற சாட்சியங்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, பிரித்தானிய உள்விவகார அமைச்சின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகச் சாட்சியங்களைக் கோரியிருக்க முடியும் என அவரது சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.
அவ்வாறு செய்யாமல் வெறுமனே பல்கலைக்கழகத்திடம் மாத்திரம் தகவல்களை வினவுவது பயனற்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்ட மா அதிபர் வசமுள்ள இரகசிய ஆவணங்கள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரைக் குறிவைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'பி' (B) அறிக்கை தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரதிவாதி தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் (University of Wolverhampton) மூல ஆவணங்கள் அடங்கிய 'எழுத்து சமர்ப்பணங்கள்' (Written Submissions), குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றச்சாட்டுகளைப் பாரியளவில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன.
தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ இராஜதந்திர பயணமா?
இது எவ்வித உத்தியோகபூர்வ அழைப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு தனிப்பட்ட விஜயம் என்பதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான வாதமாகும்.
ஆனால், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு நிரல் (Event Schedule), இது உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடு (High-level Diplomatic Engagement) என்பதை உறுதிப்படுத்துவதாக பிரதிவாதி தரப்பு வாதிடுகின்றது.
குறித்த நிகழ்வு வெறும் பட்டமளிப்பு விழா மட்டுமல்லாது, அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிரபு ஸ்வராஜ் போாலின் 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் உத்தியோகபூர்வ அரச விழாவாகும். இதில் பேர்மிங்ஹாமிற்கான இந்தியத் தூதுவர் மற்றும் வொல்வர்ஹாம்டன் நகர முதல்வர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், இந்த விஜயத்தில் இராஜதந்திர நடைமுறை அதிகாரியாக (Chief of Protocol) சேனரத் திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழக வேந்தரின் உத்தியோகபூர்வ ஆண்டு விழாவில் ஒரு நாட்டின் தலைவர் பங்கேற்பது, அரசியலமைப்பின் 33(h) பிரிவின் கீழ் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய கடமையாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஹிருணி ராஜபக்ஷவின் வகிபாகம்
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இதனை 'அரச நிதி முறைகேடு' என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சித்திரிக்க முற்படும் அதேவேளை, குறித்த விஜயத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் செலவுகள் உத்தியோகபூர்வமானவை என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன.
நிகழ்வு நிரலின் படி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியாக (Head of Security, Transport & Fleet) கிறிஸ்டோபர் ரொபின்சன் என்பவர் செயற்பட்டுள்ளார். இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக இலங்கைத் தூதரகத்தின் சார்பில் 'ஹிருணி ராஜபக்ஷ' பணியாற்றியுள்ளமை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு, பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து ஒரு நாட்டின் தலைவருக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில், அதனை 'நிதி முறைகேடு' (Misappropriation) எனக் கூறுவது எவ்வகையில் நியாயமாகும் என பிரதிவாதி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சரோஜா சிறிசேனவின் 'மறதி' மற்றும் சட்டத்தின் இரட்டை நிலைப்பாடு: ரணில் தரப்பு கடும் சாடல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயம் தொடர்பான விசாரணைகளில், சட்டமா அதிபர் எதிர்கொள்ளும் பாரிய சட்டச் சிக்கலை முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவின் சாட்சியம் தோற்றுவித்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) வாக்குமூலம் வழங்கிய சரோஜா சிறிசேன, "தான் அத்தகையதொரு அழைப்பிதழைப் பார்க்கவே இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் "மேன்மைதங்கிய சரோஜா சிறிசேன" அவர்களுக்கு நேரடியாகவே உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பியுள்ளதை ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் ஆவணச் சான்றுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளிப்படுத்தும் உண்மை:
நிகழ்வு நிரலின் படி, குறித்த விழாவில் அதிவிசேட (VIP) விருந்தினர்களின் பட்டியலில் சரோஜா சிறிசேன ஒன்பதாவது இடத்தில் அமர்த்தப்பட்டிருந்ததுடன், அவரது சொந்த அலுவலகப் பணியாளரான 'ஹிருணி ராஜபக்ஷ' என்பவரே முழு நிகழ்வையும் ஒருங்கிணைத்துள்ளார் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
சம்பவங்களுடன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருந்தும், "எனக்கு எதுவும் தெரியாது" என அவர் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயன்றுள்ளார். இவ்வாறான பின்னணியில், சரோஜா சிறிசேனவை ஒரு சாட்சியாக மாத்திரம் கருதிவிட்டு, கொழும்பில் இருந்த ஜனாதிபதியின் செயலாளரைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முற்படுவது பாரிய முரண்பாடாகப் பார்க்கப்படுகின்றது.
அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு:
இந்த விசாரணை முறையானது அரசியலமைப்பின் 12(1) ஆம் பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனும் விதியை நேரடியாக மீறும் ஒரு மட்டரகமான அரசியல் வேட்டை என ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் குழு வாதிடுகின்றது.
உண்மையான ஆவணச் சான்றுகளைப் புறந்தள்ளிவிட்டு, வாய்மொழி மூலமான முரண்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைப் போக்கானது, நாட்டின் நீதித்துறை மற்றும் இராஜதந்திர கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


