மாறியுள்ள ஒரு நச்சு மூலப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குவாங்சூ (Guangzhou) மற்றும் சியான் (Xi'an) ஆகிய நகரங்களின் வளிமண்டலத்தில் நுண் பிளாஸ்டிக் (Microplastics) மற்றும் நேனோ பிளாஸ்டிக் (Nanoplastics) துகள்கள் எந்தளவுக்கு அதிகளவில் காணப்படுகின்றன என்றால், அவற்றின் மூலம் 'பிளாஸ்டிக் மேகங்கள்' கூட உருவாகத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீன அறிவியல் அகாடமியின் (Chinese Academy of Sciences) ஆராய்ச்சியாளர்கள் இந்த நகரங்களுக்கு மேல் உள்ள வளிமண்டல பிளாஸ்டிக் துகள்களைப் பரிசோதித்தனர். இந்த ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் நவீன எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron microscopy) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் கண்டறியப்பட்ட தகவல்களைப் பார்த்து அவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதோடு, தங்களது கண்டுபிடிப்புகளை 'Science Advances' இதழில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின்படி, காற்றில் மிதக்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் தூசியின் அளவு, இதற்கு முன்பு வெறும் கண்களால் (Visual methods) மதிப்பிடப்பட்டதை விட இரண்டு முதல் ஆறு மடங்கு வரை அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு நாம் நினைத்ததை விட மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை இது காட்டுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், பிளாஸ்டிக் என்பது பூமியின் ஒவ்வொரு சுற்றுச்சூழல் அமைப்பிலும் பரவியுள்ள ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. வாகனப் போக்குவரத்து காரணமாக வீதிகளில் உள்ள தூசிகள் தொடர்ந்து வளிமண்டலத்தில் சேர்வதாகவும், இது பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலப்பதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாகவும் பிரிட்டனின் 'The Independent' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் மிகவும் சிறியவை என்பதால், அவை நீண்ட காலம் வளிமண்டலத்தில் தங்கியிருந்து மேகங்கள் உருவாவதற்குப் பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. இவை மழைநீருடன் சேர்ந்து நிலத்தில் விழும்போது, பிளாஸ்டிக் கழிவுகள் முன்னதாக வெளியேற்றப்படாத மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கும் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியில் 200 நேனோமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்களைக் கூட அடையாளம் காணக்கூடிய நவீன முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த துகள்கள் உலகளாவிய காலநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த ஆய்வு இன்னும் உறுதியாக எதையும் கூறவில்லை. இருப்பினும், மேகங்கள் உருவாவதில் இவை பலமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது காலநிலை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து புதிய புரிதலை வழங்குகிறது. நுண் பிளாஸ்டிக்குகள் ஏற்கனவே கடல்கள், நமது உணவு மற்றும் மனித உடலின் உறுப்புகளுக்குள்ளும் கூட நுழைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், வளிமண்டலத்தில் இந்த துகள்களின் செயல்பாடு குறித்து இன்னும் மிகக் குறைந்த அளவே புரிதல் உள்ளது.


