இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே ஆகியோர் இணைந்து நடத்திய பாரிய அரசியல் சதித்திட்டம் குறித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த வெடிவகுப்புத் தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
சிறைச்சாலைச் சந்திப்பும் கோட்டாபயவின் வருகையும்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு விளக்கமறியலில் இருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை நேரில் சந்தித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, "கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வாரத்துக்குள் நீங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்" என பிள்ளையானிடம் உறுதியளிக்கப்பட்டதாகவும் இதற்கான சட்டரீதியான ஒருங்கிணைப்புப் பணிகளை இந்த வழக்கின் 3ஆம் சந்தேகநபரான சுரேஷ் சல்லே கையாண்டதாகவும் அரச தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சல்லே
2019ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டு, பின்னர் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவராக நியமிக்கப்பட்ட சுரேஷ் சல்லே, நாட்டின் ஒட்டுமொத்த புலனாய்வுக் கட்டமைப்பையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
அவர் பதவியேற்றதன் பின்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல முக்கிய விபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன.
அவுஸ்திரேலியாவின் 'செனல் 4' (Channel 4) ஊடகத்திற்கு இந்தச் சதித்திட்டம் குறித்துப் பல விபரங்களை அம்பலப்படுத்திய முக்கிய சாட்சியான அசாத் மௌலானா, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுரேஷ் சல்லே அடைக்கப்பட்டிருந்த அதே சிறைக்கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர தலைமையிலான விசேட குழுவினர் பிரான்ஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அசாத் மௌலானாவிடம் விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், அசாத் மௌலானா இலங்கை திரும்பி நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாராக உள்ளதாகவும் அரச தரப்பு அறிவித்துள்ளது.
தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி விபரங்கள்:
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 14 பக்கங்களைக் கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மேலதிக அறிக்கையில் பின்வரும் அதிர்ச்சித் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
-
நெருங்கிய தொடர்பு: சிறைச்சாலையில் இருந்த காலப்பகுதியில் தற்கொலைத் தாக்குதல் குழுவின் தலைவனான சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவனது சகாக்கள் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சல்லே ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளனர்.
-
இராணுவப் நிதிப் பயன்பாடு: பயங்கரவாதச் சந்தேகநபர்களுக்குப் பிணை பெறுவதற்கும், சட்ட உதவியை வழங்குவதற்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் (Military Intelligence) நிதியை சுரேஷ் சல்லே பயன்படுத்தியுள்ளார். அத்துடன் தற்கொலைத் குண்டுதாரிகளின் நெட்வொர்க்கிற்கு தாக்குதல் நடத்தப்படும் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
-
தாஜ் சமுத்ரா ஹோட்டல் அழைப்பு: தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி காலையில் அசாத் மௌலானாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சுரேஷ் சல்லே, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் பையொன்றை ஏந்தி நிற்கும் ஒருவரை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு சேர்க்குமாறு பணித்துள்ளார்.அந்த நபர் பின்னர் 'ஜமீல்' என அடையாளம் காணப்பட்டார். அவர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கத் தவறியதை அடுத்து, தெஹிவளை டொபிக்கல் இன் (Tropical Inn) விடுதியில் குண்டை வெடிக்க வைத்திருந்தார்.
அரசியல் படுகொலைகளும் தேர்தல் நோக்கமும்
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் படுகொலைச் சதியாகும் (Politically motivated) என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அத்துடன், அரச நிதியைப் பயன்படுத்திப் பராமரிக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒரு குறிப்பிட்ட குழுவும், பிள்ளையானின் TMVP குழுவும் தேசியப் பாதுகாப்பிற்காகப் பணியாற்றாமல், அரசியல் படுகொலைகளைச் செய்யும் ஒரு வலையமைப்பாகவே செயற்பட்டுள்ளன.
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தமிழ்நெட் ஆசிரியர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட பல உயர் மட்டப் படுகொலைகளுடன் இந்தக் குழுவுக்குத் தொடர்புகள் உள்ளமை குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, 3 ஆம் சந்தேகநபரான சுரேஷ் சல்லேவை திறந்த நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தக் கூடாது என்ற அரச தரப்பின் கோரிக்கை மற்றும் அவருக்கு சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விபரங்கள் மீதான பரிசீலனையை ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை நீதவான் பசன் அமரசேன ஒத்திவைத்தார்.


