நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
"அனைத்து மக்களிடையேயும் விவேகம், கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணத்தை' ஆதரிப்பதில் நான் பெருமையடைகிறேன்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் போதி மரக்கன்று ஆகியவற்றை ஏந்தி நாடு முழுவதும் பயணிக்கும் போது, எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆன்மீகத் திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியைத் தொடர்புகொள்வதற்கும் உதவும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
-
சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமியப் பிக்குவான வணக்கத்திற்குரிய பன்னாகர தேரோ (Ven. Pannakara Thero) தலைமையிலான ஏழு பிக்குகள் இன்று (21) காலை நாட்டை வந்தடைந்தனர்.
-
இந்த நடைபயணத்துடன் சர்வதேச அளவில் பிரபலமான 'ஆலோகா' (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
-
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற 'Walk For Peace' நிகழ்ச்சித் திட்டம் இன்று முதல் 28 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில் நடைபெறவுள்ளது.
-
வணக்கத்திற்குரிய பன்னாகர தேரோ உள்ளிட்ட மகா சங்கத்தினர், அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதி மரக்கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம், 'Clean Sri Lanka' திட்டம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இந்தச் சமாதான நடைபயணத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.


