வாய்ந்த 'ஆர்டெமிஸ் II' (Artemis II) விண்வெளி ஆய்வினை எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவை அண்டிய விண்வெளிப் பகுதிக்கு மனிதர்கள் எவரும் செல்லாத நிலையில், இந்தத் திட்டம் மனிதகுலத்தின் மிக நீண்ட விண்வெளிப் பயணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட 'வெட் டிரஸ் ரிஹர்சல்' (Wet Dress Rehearsal) எனப்படும் எரிபொருள் நிரப்பப்பட்ட ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 6 ஆம் திகதி இந்த விண்கலத்தை ஏவுவதற்கு ஆரம்பகட்டத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பெப்ரவரி மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை, எரிபொருள் கசிவு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, கவுண்ட்டவுன் (Countdown) சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நாசாவின் லோரி கிளேஸ் (Lori Glaze) தெரிவித்துள்ளார்.
இந்த 'ஆர்டெமிஸ் II' திட்டத்தில் மூன்று அமெரிக்கர்களும் ஒரு கனடியருமாக மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகியோரே அந்த நான்கு வீரர்களாவர்.
சுமார் 98 மீட்டர் உயரமான 'ஸ்பேஸ் லோஞ்ச் சிஸ்டம்' (SLS) எனும் மெகா ரொக்கெட் மூலம் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவர். ஓரியன் (Orion) விண்கலத்தினுள் இருந்தவாறு இவர்கள் நிலவின் மறுபக்கத்தை நோக்கி 10 நாட்கள் பயணிக்கவுள்ளனர். நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 6,500 - 9,500 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தவாறு நிலவை இவர்கள் ஆய்வு செய்வர்.
1972ஆம் ஆண்டு இடம்பெற்ற அப்பல்லோ 17 (Apollo 17) திட்டத்திற்குப் பிறகு மனிதர்கள் நிலவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், 'ஆர்டெமிஸ் III' திட்டத்தின் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் மனிதர்களை நிலவில் தரை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, 2030 ஆம் ஆண்டளவில் நிலவில் தரை இறங்குவதற்கு சீனா தீவிரமாக முயற்சித்து வருகின்ற நிலையில், அமெரிக்கா தனது நிலவுப் பயணத்தை விரைவுபடுத்தியுள்ளது.
எலோன் மாஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) மற்றும் ஜெஃப் பெசோஸின் 'ப்ளூ ஒரிஜின்' (Blue Origin) ஆகிய தனியார் நிறுவனங்களும் நிலவில் தரையிறங்கும் கலன்களை (Lander) உருவாக்குவதில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


