ஆற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் லண்டன் நோக்கிப் பயணமானார்.
அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், மிலிந்த ராஜபக்ச, தேனுக விதானகமகே மற்றும் யூ.வி.சுமித் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) ஆகிய அமைப்புகள் நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கான விசா மற்றும் பயண ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விரிவுரை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அழைக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டியே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இதுவரையில் குறித்த விரிவுரையை ரத்துச் செய்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
எனவே, திட்டமிட்டபடி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையில் கலந்துகொள்வதற்காக நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் லண்டன் சென்றுள்ளதாக சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்:
"கடந்த காலங்களில் எமது நாட்டின் லலித் அத்துலத்முதலி மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற கௌரவமிக்க தலைவர்கள் இந்தப் பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளனர்.
2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், புலம்பெயர் அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக அது தடைப்பட்டது."
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பினை முன்னிறுத்தி, இம்முறை அழுத்தங்களுக்கு பணியாது விரிவுரையை நடத்த வாய்ப்புள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பிரித்தானிய பாதுகாப்புப் பிரிவினர் நாமல் ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணப் பாதைகளில் திடீர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் யூனியனின் முதலாவது ஆசியச் செயலாளராகவும், லலித் அத்துலத்முதலி அதன் தலைவராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றுகளாகும்.


