முறைமைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550/- வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.
அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பது, பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்திற்கு கிடைத்துள்ள முக்கியமான நம்பிக்கைச் செய்தியாகும். ரூ.1,550 அடிப்படை சம்பளத்துடன், வருகைக்கான ரூ.200 ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்கப்படும் இந்த உயர்வு, மாதத்திற்கு ரூ.400 சம்பள அதிகரிப்பாக அமைகிறது. ஜனவரி 1 முதல் வங்கிக் கணக்குகள் வழியாக நேரடி வைப்பு செய்ய ரூ.5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இத்தொழிலாளர்கள், தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதி பொருட்களால் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர். ஆனால், அவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் அடிப்படை தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளது. குறைந்த சம்பளம், மோசமான வீடமைப்பு, கல்வி-சுகாதார வசதிகளின் பற்றாக்குறை போன்றவை தலைமுறைகளாக தொடரும் பிரச்சினைகள். இந்தப் பின்னணியில், சம்பள உயர்வு என்பது வெறும் பண அதிகரிப்பு அல்ல; அது ஒரு சமூக நியாயத்தின் அடையாளமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த அறிவிப்பு நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதே இன்றைய முக்கியமான கேள்வி. மூன்று அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், 22 தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர்கள் மற்றும் தனியார் சிறு தோட்டங்கள் என நான்கு பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த உயர்வு கிடைக்க வேண்டியது அவசியம்.
ஒரே நாட்டில், ஒரே உழைப்புக்கு, வேறுபட்ட சம்பள நடைமுறை ஏற்படுவது சமூக அநீதியை மேலும் ஆழப்படுத்தும். பாராளுமன்றத்தில் தொழில் அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கவலைகள் கவனிக்கத்தக்கவை. குறிப்பாக, கொழுந்து பறிக்கும் அளவை அதிகரித்து, “நிறை பூர்த்தி செய்யவில்லை என்றால் முழு நாள் சம்பளம் இல்லை” என்ற நிபந்தனைகளை தோட்ட நிறுவனங்கள் விதிப்பது, சம்பள உயர்வின் பயனை மங்கச் செய்யக்கூடியது. ரூ.400 உயர்வு அறிவிப்பாகவே இருந்து, நடைமுறையில் தொழிலாளரின் கைக்கு எட்டாவிட்டால், அது தோட்டத் தொழிலாளர்களுக்கு பயனற்றதாக மாறிவிடும்.
மேலும், ரூ.200 வருகை ஊக்கத்தொகை என்பது வேலைநிலைகளின் யதார்த்தத்தை கணக்கில் எடுக்க வேண்டிய ஒன்று. மழை, உடல்நலம், போக்குவரத்து சிக்கல்கள் போன்ற காரணங்களால் தினமும் வருகை பதிவு செய்வது பல தொழிலாளர்களுக்கு சாத்தியமில்லை. எனவே, இந்த ஊக்கத்தொகை மனிதாபிமான அடிப்படையில், நியாயமான விதிமுறைகளுடன் அமுல்படுத்தப்பட வேண்டும். நேரடி வங்கி வைப்பு முறை, இடைத்தரகர்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்க்க உதவும் நல்ல முயற்சி.
ஆனால், வங்கிக் கணக்குகள் இல்லாத தொழிலாளர்கள், அல்லது தொலைதூர பகுதிகளில் வாழ்பவர்கள் இந்த முறையால் புறக்கணிக்கப்படாதவாறு அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். தோட்ட நிறுவனங்களின் இலாப நோக்கம், தொழிலாளர்களின் உரிமைகளை மீறாதவாறு கண்காணிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
இறுதியாக, இந்த சம்பள உயர்வு ஒரு தொடக்கம் மட்டுமே. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உண்மையாக உயர்த்த வேண்டுமெனில், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த கொள்கைகள் தேவை. சம்பள உயர்வு அறிவிப்புகள் நடைமுறைப் பாதுகாப்புகளுடன் அமுல்படுத்தப்பட்டாலே, அது நம்பிக்கையை உறுதியாக மாற்றும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது அசாத்தியமான ஒன்றல்ல; அவர்கள் கேட்பது தங்கள் உழைப்புக்கு உரிய மரியாதையும், மனிதக் கண்ணியமும் தான். இந்த உயர்வு அந்த வழியில் ஒரு உறுதியான படியாக அமைய வேண்டுமென்பதே நாட்டின் பொறுப்பாகும். அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள், தோட்ட நிறுவனங்கள் இணைந்து இதை நிறைவேற்றினால், இலங்கையின் சமூக நீதி உறுதிப்படுத்தப்படும்.


