அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வணிகங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், பதிவு செய்யப்படாத வணிகங்களுக்கு ஐம்பதாயிரம் (50,000) ரூபாயும் கொடுப்பனவாக வழங்கக்கூடிய வகையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நடைபாதை மற்றும் நடமாடும் வியாபாரிகள் உள்ளிட்ட தற்காலிக வியாபார நடவடிக்கைகளுக்காக ஒரு அலகிற்கு இருபத்தையாயிரம் (25,000) ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், பாதிப்புக்குள்ளாகி முடங்கியுள்ள வணிகங்களுக்கு மேலும் விரிவான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
08/2025 வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் அட்டவணையில் வரிசை எண் 8 இல் குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்தப் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 05ஆம் திகதி வெளியிடப்பட்ட 08/2025 வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் வரிசை எண் 08 இன் மூலம் குறிப்பிடப்பட்டிருந்தது என்னவென்றால்:
"அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள தனிநபர், சிறு மற்றும் நுண் வணிகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்ற நிலைக்கு கொண்டு வருவதற்காக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கொடுப்பனவு ஒரு அலகிற்கு இரண்டு இலட்சம் (200,000) ரூபாய் என்பதாகும்."
அதற்கமைய, கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் பின்வரும் விளக்கங்கள் மற்றும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய சுற்றறிக்கையின் வரிசை எண் 08இல் "அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள வணிகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்ற நிலைக்கு கொண்டு வருவதற்காக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கொடுப்பனவு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கொடுப்பனவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வணிகங்களுக்கு ஒரு அலகிற்கு இரண்டு இலட்சம் (200,000) ரூபாய்.
- பிரதேச செயலகத்தில் வணிகமாகப் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வணிகங்களுக்கு ஒரு அலகிற்கு இரண்டு இலட்சம் (200,000) ரூபாய்.
- பதிவு செய்யப்படாத, நிரந்தரக் கட்டிடத்தில் நடத்தப்படும் வர்த்தக வணிகங்களுக்கு ஒரு அலகிற்கு ஐம்பதாயிரம் (50,000) ரூபாய்.
- பதிவு செய்யப்படாத உற்பத்தித் தொழில்கள் மற்றும் பசுமை இல்லங்கள் (Greenhouses) போன்றவற்றுக்கு ஒரு அலகிற்கு ஐம்பதாயிரம் (50,000) ரூபாய்.
- நடைபாதை மற்றும் நடமாடும் வியாபாரம் உள்ளிட்ட தற்காலிக வியாபாரங்களுக்கு ஒரு அலகிற்கு இருபத்தையாயிரம் (25,000) ரூபாய்.
- 1 மற்றும் 8.2 ஆகிய பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வணிக அலகிற்கு ஒரு கொடுப்பனவை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என புதிய சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு பயனாளி 8.3, 8.4, 8.5 ஆகிய பிரிவுகளின் கீழ் பல கொடுப்பனவுகளுக்கு தகுதி பெற்றிருந்தால், அந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் மட்டுமே கொடுப்பனவைப் பெற முடியும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


