Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ட்ரம்ப் பிணையில் விடுதலை!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2023 • 9:25 AM

ட்ரம்ப் பிணையில் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
  • நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.
  • ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், "நான் குற்றம் செய்யவில்லை" என்று மட்டுமே பதிலளித்தார்.
  • நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் "ஆம்" என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்தார்.
எழுத்து அளவு:

டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்தார்.

நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாக காணப்பட்ட ட்ரம்ப், தனக்காக காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றார்.

அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.

ட்ரம்ப் ஆஜராவதை செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மொபைல் போன் மற்றும் லேப் டாப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்தவே இல்லை. வெகு நிதானமாக வழக்கை கையாண்டார்.

வழக்கறிஞர்களுக்கான காலக்கெடு, அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயம் போன்ற வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளாகவே அது அமைந்தது.

அரசியல் அரங்கில் வெகு ஆடம்பரமாக, ஆரவாரிக்கக் கூடியவரான ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஒரு சில வார்த்தைகளையே உதிர்த்தார்.

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், "நான் குற்றம் செய்யவில்லை" என்று மட்டுமே பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை டிரம்பிடம் நினைவூட்டினார். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் "ஆம்" என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்தார்.

நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் ஆஜராவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், "என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்" என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவை சுட்டிக்காட்டினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.

மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறினார்.

அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன.

ட்ரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்ததுமே ரகசிய காவல் படையினர் அவரை சூழ்ந்து கொண்டனர். ட்ரம்ப் தனது வழக்கறிஞர்களிடம் சன்னமான குரலில் மெதுவாக பேசினார். இதனால், சற்று தொலைவில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களால் அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை.

நீதிமன்றத்தின் மையத்தில் இருந்த நடைபாதை வழியே நடந்து சென்று பின்வாசல் வழியே ட்ரம்ப் வெளியேறினார். வெளியே நின்றிருந்த ஊடகத்தினரிடம் அவர் எதையும் பேசவில்லை. அவர் மிகவும் இறுக்கமாக காணப்பட்டார்.

அமெரிக்க அதிபர்களாக பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்டு ட்ரம்ப்தான். அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில், கருப்புப் பக்கங்களாக பதிவாகியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...