வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விவரித்ததாவது:
"வருடாந்த பஸ் கட்டண திருத்தமானது கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI), அமெரிக்க டாலர் பரிமாற்ற வீதம், வங்கி வட்டி வீதங்கள் மற்றும் புதிய பஸ்களின் விலை உள்ளிட்ட 12 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றது."
தற்போது நாட்டில் நிலவும் தொடர்ச்சியான நாணய வீழ்ச்சியானது, போக்குவரத்துச் செலவுகளை நேரடியாக அதிகரிப்பதுடன், பஸ் கட்டண திருத்தத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையானது பஸ் தொழில்துறையினருக்கும், அன்றாடம் பஸ்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் ஒரு கடுமையான நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


