வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவுறுத்தலை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் வழங்கியுள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தாஸநாயக்க நாடாளுமன்றில் இன்று (20) முறையிட முயன்றதைத் தொடர்ந்து, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சபையில் பெரும் பதற்ற நிலை உருவானது.
சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதார மாநாடொன்றில் பங்கேற்பதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்தே அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார்.
அதிதீவிரமடைந்த சர்ச்சை
இது குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சி எம்பியான சாமர சம்பத் தாஸநாயக்க, தனது கடவுச்சீட்டு (Passport) தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சீன விஜயத்திற்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் உத்தியோகபூர்வ கடிதம் மற்றும் சீன அரசின் அழைப்பிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பித்து, நீதிமன்றில் தான் பிரேரணையொன்றை முன்வைத்த போதிலும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (Bribery Commission) தொடர்ச்சியாக அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் தனக்கு பயண அனுமதி கிடைக்கவில்லை என அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகரின் அதிரடி உத்தரவு
சாமர சம்பத் எம்பியின் உரைக்கு இதன்போது கடும் எதிர்ப்பு வெளியிட்ட சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, குறுக்கிட்டுப் பேசினார். நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு விடயம் குறித்து நாடாளுமன்றில் பேச முடியாது என அவர் உத்தரவிட்டார்.
"நீதிமன்றம் ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் அதன் தீர்ப்புகள் குறித்து நாம் நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்க முடியாது, அதற்கு விதிகளில் இடமில்லை" என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.
சபைத் தலைவரின் சாடல்
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த விவகாரமானது எந்த வகையிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை (Privilege) சார்ந்த விடயமல்ல எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
"உங்களுக்குப் பேசுவதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்கினோம். ஆனால், நீங்கள் தற்போது பேசுவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு முரணானது. ஏனையோரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகக் (Accused) குறிப்பிடப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவொன்று நடைமுறையில் உள்ளது. எனவே, அது குறித்து நாடாளுமன்றில் பேச முடியாது" எனத் தெரிவித்தார்.
சபையில் கூச்சல் குழப்பம்
சபைத் தலைவரின் இந்த உரையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தாஸநாயக்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டது.
இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி கூச்சலிட்டதால் சபையில் பெரும் பதற்றமும், குழப்பகரமான சூழ்நிலையும் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, சாமர சம்பத் தசநாயக்கவை, நாடாளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.


