மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று ஒரு விசேட நிபுணர் தெரிவித்துள்ள போதிலும், விமான நிலையங்களில் சோதனைகளை வலுப்படுத்துமாறும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டமைப்பின் தலைவரும் விசேட மருத்துவருமான சமல் சஞ்சீவ (Dr. Chamal Sanjeewa) தெரிவிக்கையில், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்த போதிலும், இலங்கைக்கு எபோலா பரவும் அபாயம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அறிக்கைகளின்படி, எபோலா வைரஸ் நோயுடன் தொடர்புடைய சுமார் 65 மரணங்களும் 246 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், உலக சுகாதார அமைப்பின் (WHO) படி இந்நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாகக் கருதப்படுவதால், இந்த வைரஸ் ஏனைய நாடுகளுக்குப் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் மேலும் கூறினார்.
எபோலா என்பது காய்ச்சல், உடல் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான நோயாகும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதித்து மரணத்திற்கும் வழிவகுக்கும்.
சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்து, உடல்நலக் குறைவை உணரும் நபர்களை உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அல்லது தகுதிவாய்ந்த மருத்துவரை நாடுமாறு டொக்டர் சஞ்சீவ அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், சாத்தியமான அறிகுறிகளுடன் வரும் பயணிகளை விரைவாகக் கண்டறிந்து பரிசோதனை செய்யக்கூடிய வகையில், விமான நிலையங்களில் சோதனைகளை மேம்படுத்துமாறு அவர் சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நோய் உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என சில சர்வதேச எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், சரியான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் இலங்கைக்கு உள்ள ஆபத்து இன்னும் மிகக் குறைவு என்றே டொக்டர் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


