இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார்.
அத்துடன் இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர்.
அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைவதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


