துப்பாக்கிதாரி மற்றும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய நபர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இன்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் வழங்கிய விபரங்கள்:
குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொலைக்குத் தேவையான துப்பாக்கிகளை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவத்திற்காக ரிவோல்வர் (Revolver) ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் ருக்ஹவெல, பன்சல வீதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொலையாளிகள் தங்கியிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர் காலி, எத்கந்துர பகுதியைச் சேர்ந்த வன்னிஆராச்சிகே சிஹின தில்சர என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரையும் வாகனத்தையும் தேடி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "டுடு" (Tutu) என்று அழைக்கப்படும் உக்கல்ல ஆராச்சிகே தரிந்து மதுசங்க எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரே இக்கொலையைத் திட்டமிட்டு மெய்யப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.


