வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதாக தேர்தலுக்கு முன் உறுதியளித்த திசைகாட்டி அரசாங்கம், தற்போது சட்டமாக்க முனையும் புதிய பயங்கரவாதச் சட்டம் குறித்து மனித உரிமைகள் சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன வழங்கிய விவரிப்பின் ஒரு பகுதி இதுவாகும். இக்கட்டுரை முதன்முதலில் 2026 ஜனவரி 11 அன்று ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது.)
புத்தாண்டு பிறக்கவுள்ள வேளையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை' (PSTA) மக்கள் முன் சமர்ப்பித்தது. ஏதோ ஒரு பாராட்டுக்குரிய காரியத்தைச் செய்து முடித்தது போன்ற சுய திருப்தியுடன் அவர்கள் இதனைச் செய்தனர். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது.
‘மோசமான’ சட்டமூலங்களை ‘நல்ல’ திருத்தங்களால் சீர்செய்ய முடியாது
ஆயினும், இந்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஆராயும்போது, அதில் உள்ள பல சிக்கலான விடயங்கள் காரணமாக இது பாராட்டுக்குரிய ஒன்றாகத் தெரியவில்லை.
இந்தச் சட்டமூலம் குறித்த நான்காவது விசாரணையின் போதும் எம்முன் எழும் கேள்வி என்னவெனில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிவில் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் 'சமநிலையை' பேணுவது பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இவ்வாறான ஒரு விரும்பத்தகாத ஆவணத்தை வெளியிட்டது அரசாங்கத் தரப்பின் குழப்பத்தால் நேர்ந்ததா என்பதாகும்.
பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலத்தில் எந்தவிதமான 'சமநிலையும்' இல்லை என்று கூறுவதே போதுமானது. இந்த சட்டமூலமானது, இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (ATB, 2023) தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில், ஒரு சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை ஆராயும்போது நீதிமன்றம் சட்டவாக்கத்திலோ அல்லது கொள்கை உருவாக்கத்திலோ ஈடுபடுவதில்லை.
அங்கு அரசாங்கத்தின் பொறுப்பு, தனது சட்டமூலங்கள் மக்கள் ஆணையைப் பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதாகும். மேலும், இதனைத் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு 'வரைவு' எனக் கூறித் தப்பிக்க முடியாது. இதில் உள்ள கடுமையான மோசமான சரத்துக்களைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வாறான எளிய திருத்தங்கள் மூலம் இதனைச் சரிசெய்ய முடியாது என்பது தெளிவாகிறது. உண்மையில், முந்தைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருந்த மிகச்சிறிய நல்ல அம்சங்களைக் கூட தற்போதைய அரசாங்கம் நீக்கியிருப்பது பாரிய கவலையைத் தருகிறது.
அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான பாதுகாப்புகளை நீக்குதல்
தனிநபர்களுக்கு எதிராக ‘கட்டுப்பாட்டு உத்தரவுகளை’ (Restriction Orders) பிறப்பிக்கும் அதிகாரம் இதில் உள்ள பிரதான சிக்கலாகும். விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தில், இந்த அதிகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் சில ஏற்பாடுகள் இருந்தன. அதன்படி, பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில், சட்டமா அதிபர் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விண்ணப்பத்திற்குப் பின்னரே அந்த அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அந்தப் பாதுகாப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, புதிய சட்டமூலத்தின் 64(1) சரத்தின் மூலம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு குறையாத எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இந்த அசாதாரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையானதெல்லாம் ஒரு நபர் பயங்கரவாதக் குற்றத்தைச் செய்யத் தயாராகிறார் என்று நம்புவதற்கு 'நியாயமான காரணங்கள்' இருப்பது மட்டுமே. இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு அவை 'அத்தியாவசியம்' என உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற முந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
தடை உத்தரவுகள் தொடர்பாக, இந்தச் சட்டமூலம் முந்தைய வரைவுகளை விட மிகவும் கடுமையானதாகவும் தன்னிச்சையானதாகவும் உள்ளது. பழைய சட்டத்தின் கீழ் ஒரு தடை உத்தரவு ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும், அதனை நீட்டிக்கும்போது 'காலோசிதமான மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை' ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் மீது ஏற்படுத்தும் கவலைக்குரிய தாக்கம்
புதிய சட்டமூலத்தின் கீழ் இது மாற்றப்பட்டுள்ளது. 63(6) சரத்தானது 'இந்தச் சரத்தின் கீழ் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவானது அது ரத்து செய்யப்படும் வரை செல்லுபடியாகும்' எனக் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதற்கு கால எல்லை இல்லை. மாறுகின்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இன்றி இத்தகைய உத்தரவுகள் காலவரையறையின்றி நீடிக்கலாம். இதனை 6 ஆவது சரத்துடன் சேர்த்து வாசிக்கும்போது பல கவலைக்குரிய விடயங்கள் உள்ளன.
இதில் மற்ற விடயங்களுடன், 'தடைசெய்யப்பட்ட அமைப்புக்காகத் தகவல்களைப் பரப்புதல்' குற்றமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தகைய அமைப்புகள் குறித்த சட்டபூர்வமான ஊடக அறிக்கையிடல்களும் பாதிக்கப்படுமா? 2018 இல் வரைவு செய்யப்பட்ட சட்டத்திலும் (CTA) தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட குற்றங்கள் இருந்தன. ஆனால் பழைய சட்டங்களுடன் ஒப்பிடுகையில், புதிய சட்டமூலம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு தளர்வாக (Loose terminology) உள்ளது. உதாரணமாக, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதைத் தடுப்பதை யாரும் குறை கூற முடியாது.
ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளின் எல்லையைத் தீர்மானிப்பதில் எடுக்கப்பட்டுள்ள முறையற்ற சுதந்திரமாகும். அத்தோடு, 6 ஆவது சரத்தின் மூலம் 'தடை செய்யப்பட்ட அமைப்பு' தொடர்பாகத் தனது தொழில்முறைப் பொறுப்புகளை நிறைவேற்றும் ஒரு சட்டத்தரணியைப் பாதுகாப்பதற்கான நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ள போதிலும், செய்திகளை அறிக்கையிடும் ஊடகங்களுக்கு அத்தகைய எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இலங்கைப் பிரஜைகள் மீதான பொறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தாலும், இவ்வாறான பின்னோக்கிய புறக்கணிப்புகள் சர்வதேச ரீதியாக எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
சர்வதேச சிறந்த நடைமுறைகள்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டு வரும்போது, இலங்கை சர்வதேசச் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளது. GSP Plus சலுகையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த இந்த உறுதிமொழிகள் அவசியமானவை. இலங்கை கையெழுத்திட்டுள்ள முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளை 'பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தாமை' உள்ளிட்ட காரணங்களால் 2010 ஆம் ஆண்டில் இந்தச் சலுகை ஒருமுறை ரத்து செய்யப்பட்டது.
சர்வதேச சட்டத் தரங்களின்படி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்துவது 'தொடர்புடைய நோக்கத்திற்காக அத்தியாவசியமானதாகவும்' (Necessary) மற்றும் அதற்கு 'விகிதாசாரமானதாகவும்' (Proportional) இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டின் 'கிலான் மற்றும் குயின்டன் எதிர் ஐக்கிய இராச்சியம்' (Gillan and Quinton v. UK) வழக்குத் தீர்ப்பு இந்தத் தத்துவத்தை விளக்குகிறது. அங்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ECtHR) பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த 'மறித்துச் சோதனை செய்யும்' (Stop and Search) அதிகாரங்களை நிராகரித்தது.
இந்த வழக்கின் விளைவாக, அப்போதைய ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, அதிகாரங்களைப் பயன்படுத்துவது 'பொருத்தமானது' (Expedient) என்பதைக் காட்டிலும் 'அத்தியாவசியம்' (Necessary) என்பதில் கடுமையான சோதனைகளை விதித்தார்.
சரியான மொழிப் பயன்பாட்டின் முக்கியத்துவம்
முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின் 58 ஆவது சரத்தின் மூலம், விளக்கமறியலில் உள்ள ஒருவரை வழக்கு முடியும் வரை 'எந்தவொரு சட்டபூர்வமான அதிகார சபையின்' காவலிலும் வைப்பதற்கு உத்தரவிட பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கிற்காக அவ்வாறு செய்வது 'அத்தியாவசியம்' அல்லது 'பொருத்தமானது' என்று செயலாளர் கருதினால் இது நிகழலாம்.
'பொருத்தமானது' (Expedient) போன்ற சொற்கள் நீக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த சட்டமூலத்தின் பின்னாலுள்ள உண்மையான 'நோக்கம்' என்ன? தனியார் ஊடகங்களின் உரிமங்களை ரத்துச் செய்வதாக அமைச்சர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களைப் பார்க்கும்போது, பிரஜைகளை ஒடுக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இங்கு உள்ளதா?
ஒடுக்குமுறைச் சட்டங்கள் 'கர்மா'வாக மாறக்கூடும்
இது ‘நல்ல பொலிஸ்காரன், கெட்ட பொலிஸ்காரன்’ தந்திரோபாயத்தைப் போன்றது. அதாவது, ஜனாதிபதி தமக்கு எந்தத் தீய நோக்கமும் இல்லை என உறுதியளிக்கும் அதேவேளை, அமைச்சர்கள் 'மோசமான' சட்டங்களை முன்வைக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கசப்பான உண்மையை நினைவுபடுத்த வேண்டும். எந்தவொரு ஆட்சிமுறையும் நிரந்தரமானது அல்ல. ஒரு நிர்வாகத்தினால் கொண்டுவரப்படும் ஒடுக்குமுறைச் சட்டங்கள், பின்னர் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களினால் அந்தச் சட்டங்களைக் கொண்டுவந்த தலைவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும். நீதியின் இவ்வாறான கவித்துவமான அல்லது செய்த வினை பின்னே வரும் (கர்மா) நிகழ்வுகளுக்கு இலங்கை வரலாறு சான்றாக உள்ளது.


