அம்மன் கோவிலுக்கு அருகில், நீல நிறக் கொத்தாகக் காட்சியளிக்கும் பாரிய கல் ஒன்று தென்பட்டதையடுத்து அந்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல் பெறுமதிமிக்க மாணிக்கக்கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டித்வா சூறாவளி நிலவிய காலத்தில் ஏற்பட்ட மண்சரிவுடன் இந்தக் கல் மேட்டுப் பகுதியிலிருந்து கீழ் நோக்கித் தள்ளப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த மண்சரிவினால் அப்பிரதேசத்திலுள்ள பல வீடுகளுக்கும் கோவிலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோவில் எதிர்வரும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்த நிலமையின் பின்னர், கோவிலுக்கு அருகில் பல வண்ணங்களில் ஒரு கல் இருப்பதனை மக்கள் முதன்முதலில் அவதானித்துள்ளனர். அந்த இடத்திலிருந்து ஒருவித ஒளி வீசுவதாகப் பரவிய செய்தியையடுத்து, பெருமளவிலான மக்கள் அந்தப் பாறையைப் பார்ப்பதற்காகத் திரண்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக கலகா பொலிஸாரினால் அவ்விடத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு தொன் எடையுள்ள இந்தப் பாறையை, தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (19-ஆம் திகதி) மாலை ஆய்வு செய்துள்ளது.
இது ஒரு கொத்தாகக் காணப்படும் விசேட வகை கல் என்றும், இது உறுதியாக மாணிக்கக்கல்லா என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் குறித்த இடத்தை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதோடு, இந்தப் பாறை தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் வரை பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.


