தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளைப் பலவந்தமாகக் கையகப்படுத்தி, இராணுவப் பலத்துடன் வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ அனுசரணையுடன் காங்கேசன்துறை, தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அதுவரை பதிவு செய்யப்படவில்லை எனப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கையில், நவம்பர் 24 ஆம் திகதி அமைந்திருந்த இல் பூரணை (போயா) தினத்தன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளின் தலைமையில் தமிழ் மக்கள் திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர். "எமது காணியை எமக்குத் தாருங்கள், எமது காணியை எமக்குத் தாருங்கள்" என அவர்கள் சிங்கள மொழியிலும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
16 குடும்பங்களுக்குச் சொந்தமான எட்டரை ஏக்கர் காணிப் பிரச்சினை
திஸ்ஸ ரஜமகா விகாரையை நிர்மாணிப்பதற்காக யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்று விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், தமிழ் குடும்பங்கள் 16 பேருக்குச் சொந்தமான ஏறக்குறைய எட்டரை ஏக்கர் நிலப்பரப்பைப் பலவந்தமாகக் கையகப்படுத்தியே இராணுவம் திஸ்ஸ விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
-
இராணுவத்தின் நிலைப்பாடு: "கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை நீளும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த விகாரை தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது" என இராணுவம் தெரிவிக்கிறது. அத்துடன், "காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையின் புனரமைக்கப்பட்ட தூபியில் கலசம் வைக்கும் புண்ணிய வைபவம்" 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெற்றதாக 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வச் செய்தி இணையத்தளத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது.
-
நாகதீப விகாராதிபதியின் கருத்து: தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரங்கள் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தித் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்கருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரரும் குறிப்பிட்டுள்ளார்.


