சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் பின்னர், சேத விபரங்களின் அடிப்படையில் ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகள் தொடர்பாக எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனைத்து விவசாயிகளும், அந்தந்த விவசாய சேவை நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சேத விபரப் பதிவேட்டில் தங்களது சேதங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக விவசாயிகளிடமிருந்து எந்தவொரு காப்புறுதிச் சந்தா கட்டணமும் (Premium) அறவிடப்படாமல், முற்றிலும் இலவசக் காப்புறுதியின் கீழ் அரசாங்கத்தினால் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வளிமண்டலக் கீழ்த்தளத் தளம்பல் நிலை காரணமாகப் பெய்த பலத்த மழையினால் சில மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ள நீர் வடிந்தோடிய பின்னரே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் துல்லியமான அளவைக் கணக்கிட முடியும்.
2026 ஆம் ஆண்டின் யல (சிறுபோக) பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த பலத்த மழை பெய்துள்ளதால், சேதமடைந்த பயிர்கள் அனைத்தும் தங்களின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியிலேயே காணப்படுகின்றன.
நாட்டின் விவசாய சமூகத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். எனவே, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதிகபட்ச பலன்களை வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


