அது தொடர்பாக தாமதமின்றி நேரடி நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருப்பது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பாரிய பலவீனமாகும். தீபச்செல்வன் விவகாரத்தில் இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சுனில் செனவியின் அமைச்சின் ஊடாக, அதன் செயலாளரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒரு பயனற்ற ஆவணமாகவே உள்ளது.
அமைச்சர் சுனில் செனவி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற கூட்டமும் அத்தகைய பயனற்ற ஒன்றாகும். கிளிநொச்சியில் வசிக்கும் எழுத்தாளர் தீபச்செல்வன் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, எந்த முடிவும் இன்றி அலைக்கழிக்கப்பட்டு வெறும் கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் அச்சிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்படும் நுல்கள் தொடர்பாக பின்பற்றப்படும் சாதாரண நடைமுறை என்னவென்பதும், அதன் பொறுப்பு யாரிடம் உள்ளது என்பதும், இது குறித்து தமது அமைச்சுக்குச் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதும், சுங்கப் பணிப்பாளர் நாயகம் அனைத்தையும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதும் - இவ்வளவு தூரம் இப்பிரச்சினை முற்றிய பின்னர் சொல்ல வேண்டிய விடயங்கள் அல்ல.
ரணவளவின் பட்டமாக (Degree) இருக்கட்டும், நிலக்கரி மோசடியாக இருக்கட்டும் அல்லது தீபச்செல்வனின் நுல்களாக இருக்கட்டும்; ஏதேனும் ஒரு விடயம் பொதுவெளியில் பேசுபொருளாக மாறிய பின்னர், அதற்கு அரசாங்கம் எவ்வளவு வேகமான முறையில் பதிலளிக்கிறது என்பது அதன் நிர்வாகத் திறமையை அளவிடும் ஒரு 'லிட்மஸ்' (Litmus) சோதனையாகும். குறிப்பாக, புதிய முகத்துடன் பதவியேற்ற ஓர் அரசாங்கத்திற்கு இது மிக முக்கியமான சோதனையாகும்.
பேச்சு மற்றும் படைப்புச் சுதந்திரம், தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் போன்ற தவிர்க்க முடியாத விடயங்களை உள்ளடக்கிய தீபச்செல்வனின் நான்கு நூல்களின் 360 பிரதிகளை மூன்று வாரங்களாக சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க முடியாமல் இருப்பது, முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களில் விரைவாக தலையிட முடியாமையைக் காட்டுகிறது. இது நிர்வாகத்தில் இருக்கக்கூடாத ஒரு மோசமான நோயாகும்.
இது, ராஜபக்ஷர்களின் அல்லது ரணிலின் அரசாங்கத்தில் நடந்திருக்கலாம்; ஆனால், வடக்கிலும் தெற்கிலும் பாரிய மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது நடப்பது மிகவும் பாரதூரமானது.
அமைச்சர் சுனில் செனவி அவர்களே! சுற்றி வளைத்துப் பேசாமல் நீங்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டும்!
இதனை வேறு யாருடைய பொறுப்பாக மாற்றாமல், உங்கள் பொறுப்பாக ஏற்றுக்கொள்வதை நீங்கள் இப்போதாவது செய்ய வேண்டும்.
சுங்கத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, மொழிபெயர்ப்பாளர்கள் எனத் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விரைவாக ஒருங்கிணைக்கும் தலைவராக நீங்கள் இந்த நேரத்தில் செயற்பட வேண்டும்.
"வழமையான நடைமுறைப்படி செல்வது" என்பது ஒரு விடயம் பொதுப் பேசுபொருளாக மாறும்போது, அந்தப் பாதையிலேயே வேகமாகவும் சரியான இலக்கை நோக்கியும் செல்வதைக் குறிக்கும். அதனைச் செய்ய வேண்டியது உங்களது பதவியின் கடமையாகும்.
ஆட்சிமுறை என்பது தேவையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மற்றும் சரியான முக்கியத்துவத்துடன் எடுப்பதாகும். ஒரு பிரச்சினை தீவிரமடைந்த பின்னரும் அதனைச் சுற்றித் திரிந்துகொண்டு நேரத்தைக் கடத்துவது முறையான நிர்வாகம் அல்ல.


