ராஜபக்ஷர்கள் சந்தர்ப்பம் வழங்க முயன்றதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றுமொரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
2009 மே 17ஆம் திகதி காலை, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுப்புத் தெரிவித்ததுடன், ஒரு மூன்றாவது தரப்பிடம் (Third Party) மாத்திரமே சரணடைய விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆனால், ராஜபக்சக்கள் அதனை ஏற்காது இராணுவத்திடமே சரணடையுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சரணடைவுத் திட்டம் வெற்றியடைந்திருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் என்றும், பிரபாகரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அந்த நேரத்தில் தான் சீனாவிற்குச் சென்றிருந்ததாகவும், இந்தத் திட்டங்கள் குறித்துத் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இராணுவம் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கே திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் இராணுவத்திற்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையில் 2009 மே 17ஆம் திகதி இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றின் காணொளியையும் இதன்போது அவர் ஆதாரமாக வெளியிட்டார்.
இந்தக் காணொளியை பதிவு செய்த ஊடகவியலாளர் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அண்மையிலேயே இக்காணொளி தனக்குக் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்தமையினாலேயே, மே 19ஆம் திகதி அவர்களை முற்றாக ஒழிக்க இராணுவத்தால் முடிந்தது என சரத் பொன்சேகா இதன்போது வலியுறுத்தினார்.


