ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமார இன்று (18) அறிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ விஜயம் என்ற போர்வையில் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு பிணை வழங்குவது குறித்த உத்தரவை அறிவிக்கும் போதே நீதவான் பின்வருமாறு அவதானிப்புகளை முன்வைத்தார்:
மருத்துவ அறிக்கைகள் மீதான சந்தேகம்:
"முதலாவது சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் அத்தகைய தீவிர சிகிச்சை பெற்றதாகத் தெரியவில்லை.
அத்துடன் பிணை கிடைத்த பின்னரும் அவர் அத்தகைய ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றமைக்கான தகவல்கள் இல்லை. அந்த பிணை உத்தரவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெறப்பட்டவை அல்ல" என நீதவான் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்:
நாட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். முதலாவது சந்தேகநபரான ஜனாதிபதிக்கும், இரண்டாவது சந்தேகநபரான ஜனாதிபதி செயலருக்கும் சட்டம் வேறுபட முடியாது எனத் தெரிவித்த நீதவான், சமன் ஏகநாயக்கவை 20 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மன ரீதியான அச்சத்தை உருவாக்க முயற்சி - மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்:
இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானியாவின் வுல்ப்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்திடம் இருந்து இன்னும் பதில்கள் கிடைக்காத நிலையில், இவ்வழக்கு முறியடிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


