நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (18) கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த விஜயத்திற்காக பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அழைப்பிதழானது உத்தியோகபூர்வமானதா? அல்லது தனிப்பட்ட ரீதியிலானதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பிரித்தானியாவின் வுல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்திற்கு வினாக்கொத்து ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மின்னஞ்சல் மற்றும் வான் அஞ்சல் ஊடாக 9 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனுப்பியிருந்தது. எனினும், கடந்த வழக்கு விசாரணையின் போது அதற்கான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, அந்தத் தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுமா என்பது குறித்து சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த செலவு மதிப்பீடுகளை தயாரிக்கும் போது, அன்றைய உயர்ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொறுப்புகள் குறித்து பிரதிவாதி தரப்பு இதற்கு முன்னர் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்திருந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழகத்திடமிருந்து கிடைத்த புதிய தகவல்கள் அல்லது விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றிற்கு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


