தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கடந்த ஒரு வருட காலமாக அறிவித்தல் விடுத்த போதிலும், இதுவரையில் எந்தவொரு சட்டத்தரணியும் சிறுவர்களுக்காக இலவசமாகச் சேவையாற்ற முன்வரவில்லை.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிக்கையிடப்படும் சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்காக சட்ட ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்குவதே இந்தக் குழாமை அமைப்பதன் நோக்கமாகும்.
இதன் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதும், விடயங்களை முன்வைப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நலன்களுக்கிடையிலான மோதல்களைத் (Conflicts of interest) தவிர்த்து செயற்படக்கூடிய தகுதியுள்ள சட்டத்தரணிகள் இந்தச் சட்டத்தரணிகள் குழாமில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குழாமில் ஒரு சட்டத்தரணியாகச் செயற்படுவதற்கு, அவருக்கு 10 வருடங்களுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் இருத்தல் வேண்டும் என்பதுடன், நீதவான் நீதிமன்றம் அல்லது மேல் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையான அனுபவமும் இருத்தல் வேண்டும். மேலும், சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் ஈடுபடும்போது ஏற்படும் அனைத்து தொழில்முறை செலவுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அந்தச் சட்டத்தரணிகளே ஏற்க வேண்டும் எனவும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இரகசியத்தன்மை உடன்படிக்கை (Confidentiality Declaration) ஒன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் அதன் தலைவி அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு வருட காலமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இது குறித்து அறிவித்தல் விடுத்தும், இதுவரை எந்தவொரு சட்டத்தரணியும் தமது சேவையை இலவசமாக வழங்க முன்வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


