டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 65 வயது சீக்கிய மதகுரு சந்த் பாபா ராம் சிங் புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலம், கர்னால் அருகே உள்ள சிங்காரா கிராமத்தை சேர்ந்தவர் இவர்.

அவர் இறந்தபோது, அவரது கையில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட தாள் ஒன்று இருந்தது என்கிறது பிடிஐ செய்தி முகாமை. விவசாயிகளின் துயரத்தைத் தாங்க முடியவில்லை என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதை சந்த் ராம் சிங்தான் எழுதினார் என்று கூறப்பட்டாலும், அதன் உண்மைத் தன்மையை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து உயர் அதிகாரி அரவிந்த் சாப்ரா கருத்து தெரிவிக்கையில் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவல் தங்களுக்குத் தெரியும் என்றும் அதிகாரபூர்வமாக தங்களுக்குத் தகவல் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த சிங்கு எல்லைப் பகுதியில் இருந்து, அவர் உடனடியாக கர்னால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்ததாகவும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?

இதனிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்தே விவசாயிகளுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது. அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், போராட்டம் எப்படி நடக்கிறது என்பது குறித்து நாங்கள் ஆராய்வோம் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

என்ன மாதிரியான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்று மத்திய அரசைக் கேட்போம். அதை சிறிது மாற்றியமைப்பதன் மூலம் மக்களின் போக்குவரத்து உரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கேட்போம் என்றும் அவர் கூறினார்.

"சட்டங்களுக்கு எதிராக போராடுவது அடிப்படை உரிமை. அதை தடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், யார் உயிருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதைத்தான் பார்க்கிறோம்" என்றார் அவர்.

சொத்துகளை சேதப்படுத்தாமல், அஹிம்சை முறையில் நடக்கிறவரை போராட்டம் என்பது அரசமைப்புச் சட்டப்படி ஏற்புடையதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராகுல் இரங்கல்

சந்த் ராம் சிங் மரணத்துக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, "விவசாயிகளின் துயரம் தாளாமல் கர்னால் பகுதியைச் சேர்ந்த சந்த் ராம் சிங் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு இரங்கலையும், அஞ்சலியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகள் போராட்டம் ஏன்? புதிய சட்டங்களில் என்ன பிரச்சனை?

பல விவசாயிகள் தங்கள் உயிரை ஈந்துள்ளனர். மோதி அரசின் வன்மம் எல்லை கடந்துவிட்டது. பிடிவாதத்தை விட்டு புதிய விவசாயிகள் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்" என்று டிவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் சந்த் ராம் சிங் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் போராட்டம்

டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம், மூன்று வாரங்களைக் கடந்து அமைதியான வழியில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு புதிய திருப்பமாக, நேற்று புதன்கிழமை (டிசம்பர் 16), தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளார்கள் எனதெரிய வருகின்றது.

கடந்த செப்டம்பர் 2020-ல் இந்த புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடி வருகிறார்கள். 

இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் வேளாண் விளை பொருள்களின் சந்தையில் இருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றும் என்கிறது மத்திய அரசு.

குறைந்தபட்ச ஆதார விலையை, இந்த சட்டங்கள் ஒழித்துவிடுமோ என சிறு விவசாயிகள் அஞ்சுகிறார்கள். அதோடு பெரு நிறுவனங்கள் மற்றும் பெரிய வியாபாரிகளின் தயவில் விவசாயம் செய்ய வேண்டி இருக்கும் எனவும் பயப்படுகிறார்கள் விவசாயிகள்.

"இந்த விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பல விவசாயிகள் கடன் சுமையால் தத்தளிப்பார்கள். என்னைப் போல பல தாய்மார்களும் சகோதரிகளும் தங்கள் கணவன்மார்களை இழந்து விதவைகளாவார்கள்" என்று போராட்டத்தில் பங்கேற்ற ஹர்ஷ்தீப் கவுர் என்ற பெண் கூறுகிறார்.

"என் கணவர் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்" என்கிறார் ஹர்ஷ்தீப்.

தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகத்தின் கணக்குப் படி, 2018-ம் ஆண்டில் 10,350 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தற்கொலை கொண்டவர்களில் இது எட்டு சதவீதம் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி