-
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை பயங்கர விபத்து.
-
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி லொறி மீது உர மூட்டைகளை ஏற்றிவந்த மற்றுமொரு லொறி மோதி கவிழ்ந்ததில் விபரீதம்.
-
உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய மீனவர்கள் என அடையாளம்.
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் (A-9) பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொரோச்சோலை பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவொன்று பயணித்த லொறி வண்டி ஒன்று வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உர மூட்டைகளை ஏற்றிய மற்றுமொரு லொறி வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது. இதன் போது உர லொறியானது மீனவர்கள் இருந்த லொறியின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தின் காரணமாக, லொறியில் பயணித்த மீனவர்களான நொரோச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் ஒரு மீனவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த நபர் அவசர சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


