கொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சூழ்நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், குறைந்தது 80 நாடுகளில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊடக அறிக்கைகள் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ள சர்வதேச ஊடக ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அமைச்சு மட்ட உத்தரவுகள், சட்டம், அவசரகால விதிமுறைகள் மற்றும் நீதித்துறை உத்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளின் கீழ் 580,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 15 முதல் 2020 மே 22 வரையான இந்த ஆய்விற்கமைய, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது, குறித்த இரு நாடுகளிலும் தலா 100,000 கைதிகளை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலக அறிக்கைகளுக்கு அமைய, இந்த காலகட்டத்தில் 3,000 கைதிகள் இலங்கையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அவர்கள் எவரும் விடுவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அபராதம் செலுத்த முடியாதவர்கள், பிணை வழங்கப்படாதவர்கள், பிணையாளிகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், மிகச் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் பெரும்பாலானவர்கள் தண்டனைகளை நிறைவு செய்தவர்கள், நீண்ட காலமாக சிறையில் இருந்தவர்கள், மிகவும் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பிணை வழங்க முடியாதவர்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என ஜனாதிபதி சட்ட விவகாரம் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள்

இந்த குழுவில் ஒரு அரசியல் கைதியும் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு, இந்த முக்கியமான கட்டத்தில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைத் தொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு உடல் மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பல அரசாங்கங்கள் கவனம் செலுத்தத் தவறியது குறித்து வடக்கில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கக் காவலில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டியுள்ள, ”குரலற்றவர்களுக்கான குரல்” அமைப்பு தொற்றுநோய் சிறைச்சாலைகளுக்குள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி அல்லது நிபந்தனையுடன் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நிபந்தனைகளுடன் தம்மை விடுதலை செய்யுமாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அனுராதபுரம் சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதோடு, ஆறு பேர் காயமடைந்தனர்.

தொற்றுநோய் அச்சுறுத்தலின் போது கைதிகளின் சுதந்திரம் குறித்த உலகளாவிய ஊடக ஆய்வின் வெளியீட்டில் எழுப்பப்பட்ட மிக முக்கியமான பிரச்சினையான, அரசியல் கைதிகளை புறக்கணிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசாங்கங்களும் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துகின்றன, குறிப்பாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல், வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அத்தகைய நபர்களுடன் தொடர்பினை கொண்டுள்ளவர்களின் அடிப்படையில், கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் அனைத்து அரசாங்கங்களும் வரையறைகளை கொண்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக, அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட 1,500 கைதிகளில் 400 பேர் அரசியல் கைதிகள் என மதிப்பிட்டுள்ள பஹ்ரைனில் செயற்படும் மனித உரிமைக் குழுக்கள் எனினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குறிப்பாக அவர்களில் பலர் வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும், சிறையில் வாடுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

100,000 கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளில் பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க துருக்கி அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படாதவர்களில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், தேர்தலில் தெரிவான அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகளில் கடுமையான வைத்திய பிரச்சினைகளை எதிர்நோக்கிய கைதிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐந்து சதவீதம் மாத்திரமே

எவ்வாறாயினும், உலக சிறைக் கைதிகளில் 5% ற்கும் குறைவானவர்களே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கென நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”வயதானவர்கள், சிறுவர் குற்றவாளிகள், நீண்டகாலம் தண்டனையை அனுபவித்தவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கூடிய பெண்கள் மற்றும் நல்ல உடல்நிலையை கொண்டிராதவர்கள் ஆகியோருக்கே பெரும்பாலும் விடுதலை உத்தரவு கிடைத்துள்ளது”

இந்த சிறிய அளவுகோல்களுக்குள் மட்டுப்படுத்தாமல், "பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாத கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசாங்கங்களை வலியுறுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைத்துள்ளது.

11 மில்லியன் கொரோனா கைதிகள்!

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் காடா வாலி, அண்மையில் ”கொரோனா மூலம் சிறைகளில் உள்ள மோசமான நிலைமைகள் குறித்த தொலைநோக்கின் உண்மையான நிலைமை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

"உலகெங்கிலும் உள்ள சிறைகளில் உள்ள 11 மில்லியன் கைதிகளிள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சன நெரிசல் மற்றும் வளங்களின் பற்றாக்குறை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலாகும். கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகள் பெரும் ஆற்றல் மையங்களாக மாறியுள்ளதாக அவர் நெல்சன் மண்டேலா நினைவுதின உரையில் கூறியுள்ளார்.

விளக்கமறியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது, அவர்களை விடுவிப்பது அல்லது அவர்களை விடுதலை செய்வதற்கான பட்டியலில் சேர்ப்பது (அவர்கள் விடுதலையானது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டால்) பல நாடுகளில் உள்ள சிறைகளில் ஏற்படும் பயங்கரமான நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி