-
"உறவினர்களின் முறைப்பாட்டுக்கு அமைய சிறை அறை விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது" - ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா.
-
சலேவுடன் அருகிலிருந்த ஏனைய கைதிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் இன்றைய தினமும் (16) தொடர்கிறது.
-
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளருக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் ஆணைக்குழுவின் தீவிர அவதானம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) உத்தியோகபூர்வ விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
சந்தேகநபர் பல்வேறு சித்திரவதைகளுக்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் விடுத்த உத்தியோகபூர்வ முறைப்பாட்டுக்கு அமைவாகவே ஆணைக்குழு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிறை அறையின் அவதானிப்புகளும் குறைபாடுகளும்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா, முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் பின்னர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறை அறை (සිරමැදිරිය) குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசேட கள ஆய்வொன்றை (Field Inspection) மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
அவ்விசேட சிறை அறையைப் பரிசோதித்த போது, அதற்குள் முறையான காற்றோட்டம் (Ventilation) கிடைக்கப் பெறாமை உள்ளிட்ட பல பொதுவான அடிப்படை குறைபாடுகள் ஆணைக்குழுவின் அவதானிப்புக்கு உட்பட்டுள்ளன. இந்த நிலைமையானது, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு இருக்க வேண்டிய பொதுவான குறைந்தபட்ச சுகாதார வசதிகளைக் கட்டுப்படுத்துவதாகக் காட்டி, அது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வாக்குமூலப் பதிவுகளும் மருத்துவ வசதிகளும்
இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு அருகில் இருந்த ஏனைய கைதிகளிடமிருந்தும் ஆணைக்குழு சுயாதீனமான வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளிடமிருந்தும் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், இன்றைய தினத்திலும் (16) சிஐடி அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ஆணையாளர் மேலும் உறுதிப்படுத்தினார்.
இதற்கு மேலதிகமாக, மரணத்தை நோக்கிய உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ வசதிகள், குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகளின் அணுகல் வசதிகள், அத்துடன் அவரது உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காக வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் சிஐடியினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது நெருக்கமான அவதானத்தைச் செலுத்தியுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசேட மருத்துவக் குழுவின் அறிக்கை எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்றவுள்ள நிலையில், அதற்கு இணையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்தச் சுயாதீன விசாரணையின் உத்தியோகபூர்வ பரிந்துரைகளும் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிப்பதில் தீர்க்கமான காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


