25,704 பாரிய விபத்துக்களின் மூலமே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2016 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில் பொலிஸில் பதிவாகியுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 248,026 ஆகும்.
வீதியில் இடம்பெறும் ஒவ்வொரு விபத்தையும் பொலிஸில் அறிவிப்பது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கட்டாயமானதாகும். எனினும், சில காப்புறுதி நிறுவனங்கள் நட்டஈடு வழங்குவதில் பின்பற்றும் நடைமுறைகள் காரணமாக, மரணம் அல்லது பலத்த காயம் ஏற்படாத பல விபத்துக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பத்து ஆண்டுகளில் அதிகளவான பாரிய விபத்துக்கள் 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. அந்த எண்ணிக்கை 2,949 ஆகும். இதில் 3,154 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் அதிக மரணங்கள் பதிவானதும் 2017 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
2017 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாரிய விபத்துக்கள் படிப்படியாகக் குறைந்திருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரித்துள்ளமை புள்ளிவிபர ஆய்வில் தெரியவந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் 2,597 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,746 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் அதிகளவான பாரிய விபத்துக்கள் 2025 ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளன.
ஒப்பீட்டளவில், 1977 ஆம் ஆண்டில் 811 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றதுடன் 811 மரணங்கள் பதிவாகின. அந்த ஆண்டில் பொலிஸில் பதிவான மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 15,297 ஆகும். 1980 ஆம் ஆண்டில் 1,038 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றதுடன் 1,038 மரணங்கள் பதிவாகின. அந்த ஆண்டில் மொத்தம் 23,711 விபத்துக்கள் பதிவாகின.
வரலாற்றில் அதிகளவான வீதி விபத்துக்கள் பொலிஸில் பதிவானது 2003 ஆம் ஆண்டிலாகும். அந்த எண்ணிக்கை 59,444 ஆகும். அந்த ஆண்டில் 1,933 பாரிய விபத்துக்களில் 2,096 பேர் உயிரிழந்தனர்.
வீதி விபத்துக்களில் அதிகளவாக உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் 9,000 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவதாக அதிகளவாக உயிரிழப்பவர்கள் பாதசாரிகள் ஆவர். இக்காலப்பகுதியில் சுமார் 8,000 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவதாக அதிகளவாக உயிரிழப்பவர்கள் ஓட்டுநர்களும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட பயணிகளும் 3,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்.


