17 வயது சிறுவனின் உயிரிழப்பிற்கும் அவருக்கு சமீபத்தில் பருவகால காய்ச்சல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதிற்கும் தொடர்பில்லை என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவ கால காய்ச்சலை தடுப்பதற்காக தென் கொரியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு குறைந்தது 32 பேர் தென் கொரியாவில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய அரசின் இந்த தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்திற்கும், உயிரிழப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை அந்த நாட்டில் சுமார் 1.3 கோடி பேருக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், புதிய காய்ச்சல் பரவுவதிலிருந்து இந்த தடுப்பு மருந்து காக்கும் என்ற நம்பிக்கையில் தென் கொரிய அரசு உள்ளது.

இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகு, உயிரிழந்ததாக கூறப்படுபவர்களில் இந்த 17 வயது சிறுவனே முதலாவதாக கருதப்படுகிறார். இந்த நிலையில், காய்ச்சல் தடுப்பு மருந்தால் சிறுவன் உயிரிழந்ததற்கான எவ்வித ஆதாரமும் தங்களது சோதனையில் கிடைக்கவில்லை என்று அந்த நாட்டின் தேசிய தடயவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் சுங் சை-கியூன், இறப்புகளுக்கான உண்மையான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், உயிரிழப்புகளுக்கும் தடுப்பு மருந்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுவரை நேர்ந்துள்ள உயிரிழப்புகளுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படத்திற்கும் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு குறைப்பாகவே உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனாலும், பலர் இன்னும் அச்சத்துடனே உள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அந்த நாட்டின் தடுப்பு மருந்து சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆனால், கொரிய மருத்துவ சங்கமோ, இந்த திட்டத்தை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அந்த அமைப்பை சேர்ந்த அதிகாரியான மின் யாங்-கி, "பருவகால காய்ச்சல் தடுப்பு மருந்து திட்டம் தொடர வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். அதே சமயத்தில், தடுப்பு மருந்து திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டுமென நாங்கள் கோரவில்லை. ஆனால், உயிரிழப்புகளின் காரணத்தை தெரிந்துகொள்ளும் வரை சுமார் ஒரு வாரகாலத்திற்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கவே கோருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளதாக யோன்ஹப் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், எதிர்வரும் பருவகால காய்ச்சலில் இருந்து மூத்த குடிமக்கள் உள்ளிட்ட நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளவர்களை பாதுகாக்க தென் கொரியா விரும்புகிறது.

பொதுவாக நவம்பர் மாதத்தின் இறுதியில் தென் கொரியாவில் காய்ச்சல் பரவும் என்பதால் அதை தடுக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸுடன் சேர்ந்து இது சூழ்நிலையை மேலும் மோசமாக்கிவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவகால காய்ச்சலின் காரணமாக சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழப்பதாக யோன்ஹப் முகமை தெரிவிக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி