நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் த் தீவில் வாழும் மக்கள் உப்பு வாங்குவதற்கு அலையும் நிலை ஏன் ஏற்படுகின்றது?
65,610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட நாட்டில் 23,400 சதுரக் கிலோமீற்றர் கடல் சொந்தமாக உள்ளது. இது 1,700 கிலோமீற்றர் நீளக் கடற்கரையை உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறுள்ள இலங்கையில் இன்று 50 ஏக்கருக்கு மேற்பட்ட விஸ்தீரணம் கொண்ட உப்பளங்கள் முப்பது உள்ள போதிலும் அவற்றில் அரசிற்கு சொந்தமான உப்பளங்கள் ஆக மூன்று மட்டுமே.
இதில் ஆனையிறவு அரச உப்பளத்திற்கு 3000 ஆயிரம் ஏக்கர் நில வசதி உள்ளபோதும் மிகச் சொற்ப நிலத்திலேயே உப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது.
1990 ஆம் ஆண்டிற்கு முன்பு ஆண்டிற்கு 120,000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி இடம்பெற்ற ஆனையிறவில் இன்று வெறுமனே 18,000 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு குறிஞ்சாத்தீவில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படாதமையும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் இலங்கை தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது - இலங்கை நாட்டிற்கு ஆண்டிற்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு தேவையாகவுள்ளது.
ஆனால் 2 லட்சம் மெற்றிக் தொன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தோம். இருப்பினும் தற்போது இரு ஆண்டுகளாக நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகின்றது.
இதனைப் பங்கீட்டு அடிப்படையில் சில்லறை விலை 175 ரூபா அச்சிட்டு, 139 ரூபாவிற்கு விநியோகம் செய்கின்றோம். ஏற்றி, இறக்கல் விநியோகங்களுடன் அவர்கள் 175 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட உற்பத்திக் குறைவிற்கு நிர்வாக குறைபாடுகள் அல்லது தவறு காரணம் கிடையாது. மாறாக தற்போது நிலவும் கால நிலை மாற்றம் மட்டுமே காரணம்.
ஆனையிறவு உப்பளமானது 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுகின்றது. தற்போது அங்கு அதிகரித்த வலுக்கொண்ட சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக உப்பு உற்பத்தி மேற்கொண்டாலும் உடன் சந்தைக்கு விட முடியும். இருப்பினும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகரித்த மழை காரணமாக எதிர்பார்க்கும் உற்பத்தியை ஈட்டமுடியாத காரணத்தினாலேயே சில தனியார் நினைத்த விலையில் சந்தைப்படுத்துகின்றனர்.
அதிகரித்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி தற்போது காணப்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக 50 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. அது அடுத்த வாரம் சந்தைக்கு வரும் காலத்தில் உள்ளூர் உற்பத்தியும் வரும்போது தட்டுப்பாடோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி 175 ரூபாவிற்கு உப்பை வேண்டிய அளவில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அரச திணைக்களம் அதிக அளவில் சந்தைப்படுத்தப்படுவதாக கூறினாலும், வெளிச் சந்தையில் தனியாரின் உற்பத்தி பகிரங்கமாக 400 ரூபா அச்சடிக்கப்பட்ட பொதியில் விற்பனை செய்யப்படுகின்றமை மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.