பாண்டிய குல பேரரசு ஆன மதுரை மீனாட்சி திக்கு விஜயம் செய்த பொழுது ஈசன் மீது கொண்ட
காதலினால் தேவர்கள் சம்மதத்துடன் திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெறுவதாக புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது. தற்பொழுது வரை அதனை மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழாவாக கொண்டாடி வருகின்றார்கள்.
பாண்டிய மண்ணின் இளவரசியான மதுரை மீனாட்சி வீரமும், தாய் பாசம் கொண்ட மதுரையின் மக்களின் பெண் தெய்வமாக சிறந்து விளங்குகின்றார். புராண கதைகளின் படி பாண்டிய மன்னனின் மகளாக பிறக்கும் மதுரை மீனாட்சி பட்டத்து இளவரசியாக பட்டம் சூட்டிய பிறகு தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்கின்றாள். அப்பொழுது கையிலையில் போரிடும் பொழுது அங்கு ஈசனைக் கண்டு தனது பெண்மை வெளிப்பட அத்த தருணத்தில் இருந்து ஈசன் மீது காதல் கொண்டு அவரை ஏன் மணமுடிக்க வேண்டும் என்று எண்ணுகின்றாள்.
மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் 10வது நாளில் மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்விற்காக பரபரப்பாக தயாராகும். கல்யாண நாளில் அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள். பின்பு கோவிலில் உள்ள முத்துராமையர் மண்டபத்தில் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தை பேசி முடிப்பதாக ஐதீகம்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நிச்சயக்கப்பட்டதும் இருவரும் பட்டு உடுத்தி நகை மற்றும் ஜடை அலங்காரத்துடன் திருமண மேடைக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கு உள்ள சுந்தரேஸ்வரரின் சார்பில் ஓர் அர்ச்சகர் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, மீனாட்சி அம்மன் சார்பில் ஓர் அர்ச்சகர் மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்க டும் டும் என்று மேல தாளங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விண் அதிர சீரும் சிறப்புமாக நடைபெறும்.
இப்படி தெய்வப் பெண்ணான மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் மதுரை பெண்கள் அனைவருமே புது தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். இதன் மூலமாக மாங்கல்ய பலம் கிடைத்ததற்கு சமம் என்று நம்பப்படுகின்றது. வெறும் கல்யாணத்தோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்வை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதுரையில் உள்ள சேதுபதி பள்ளியில் விடிய விடிய வரும் மக்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்குடன் விருந்து போட்டு வழியனுப்பு வைப்பார்கள்.
மதுரை மக்களும் நம்ம வீட்டு கல்யாணத்திற்கு மொய் வைக்காமல் இருந்தால் எப்படி என்று எண்ணி பல்லாயிரக்கணக்கான மக்களும் மீனாட்சிக்காக மொய் வைத்து விட்டு வயிறார சாப்பிட்டு விட்டு செல்வார்கள். இப்படி ஒரு ஊரின் முக்கிய தெய்வத்தை தங்களுடைய வீட்டில் ஒருவராக நினைக்கும் ஊர் என்றால் அது மதுரை மாநகரமே தவிர, மற்ற எந்த ஊர்களுக்கும் இப்படி ஒரு சிறப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-நியூஸ்18