உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
நேற்று நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கை ஓங்கிய அதேசமயம் தெற்கில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி சின்னக் கட்சி) முன்னணி நிலை பெற்றது.
ஆயினும் இருநூறுக்கும் மேலான சபைகளில் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கான தனித்து அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளவில்லை.
இந்தப் பின்புலத்தில் எதிர்க்கட்சிகள் தமக்குள் ஒன்று சேர்ந்து அந்தச் சபைகளில் நிர்வாகத்தை கைப்பற்றும் நிலையும், தனித்து அதிக ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி, அச்சபைகளில் எதிர்க்கட்சியில் அமரும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களை பெற்றிருக்கின்றது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 69 இடங்களை தக்க வைத்திருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் கொழும்பு மாநகர சபை மேயர் பதவியை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெறுவது நெருக்கடியானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சிகளளான ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் அங்கு பெற்றுள்ளன. ஏனைய இடங்களை பல சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் கொழும்பு மாநகர சபையின் கூட்டத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பின் மூலமே மேயர் தேர்வு நடைபெறும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர மேயரைத் தெரிவு செய்யக்கூடிய சூழல் இருக்கின்றது. தென்னிலங்கையில் இதுதான் பல இடங்களிலும் நிலைமை.
தனித்து அதிக ஆசனங்களை எடுத்த தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய இக்கட்டு.நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியையும், நாடாளுமன்றத்தில் வலிமையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி வைத்திருக்கின்ற காரணத்தினால், நாட்டின் எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக விரும்பியோ விரும்பாமலோ தங்களுக்குள் ஒன்றுபட்டு, உள்ளூராட்சி சபைகளை ஆளுந்தரப்புக்கு கிடைக்காமல் செய்வதில் கவனமாக இருக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
-முரசு