வெளிநாட்டில் உள்ள தனது வழக்கறிஞர் நாடு திரும்பியதும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
ஆஜராவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்த மாதம் 25ஆம் திகதியன்று, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, ஆணைக்குழு நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
புத்தாண்டு விடுமுறை காரணமாக, 17ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் ஆஜராக முடியாதென, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து, 25ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாண சபையால் அரச வங்கியொன்றில் வைக்கப்பட்டிருந்த பல நிலையான வைப்புகளிலிருந்து பணத்தை எடுத்த குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த சம்பவமானது, தான் பிரதமராக இருந்த காலத்தில் என்று கூறினார்.
ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்க, நிதியமைச்சர் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பணத்தைப் பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.