இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இடம்பெற்ற அதிகளவான வன்முறைச் சம்பவங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான கட்சி மீது அதிகளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இடம்பெற்ற வன்முறைகளில் அரைவாசி சம்பவங்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்புபட்டுள்ளமை, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை அதற்கு அடுத்தபடியாக அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பித்த ஜுலை 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 392 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 191 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், இரண்டாவதாக அதிகபட்சமாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 81 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மூன்றாவது அதிகபட்ச முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக 13 முறைப்பாடுகளும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 11 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கீழ் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

160, பூர்வாராம வீதி, கிருலப்பனை, கொழும்பு - 05,

தொலைபேசி இலக்கங்கள் - 011 2826384, 011 2826388

தொலைநகல் 011 2826146

மின்னஞ்சல் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புபட்டதாக அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ளும் வன்முறைகள் தொடர்பில் 1996 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு 24 மணித்தியாலங்களும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்வதற்கு மேலதிகமாக இலக்கம் 14, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, கொழும்பு - 04 இல் புதிததாக நிறுவப்பட்ட தேர்தல் முறைப்பாட்டை பெறும் பிரிவிலும் முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 0112 2505574 என்ற தொலைநகர் இலக்கம் ஊடாகவும் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளருக்கு எழுத்துபூர்வமாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி