தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும் இலங்கையின் முன்னாள்
இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (08) பொலிஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உறுதி செய்தனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.
சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார். இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த பிள்ளையான்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார்.
1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16ஆவது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ஆம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார்.
வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிபிசி