ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதர்களையும் கடித்த கதை பற்றி பேசுவது உண்டு.
அப்படியாக இருக்கின்றது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கைகள்.
இதுவரை காலமும் அயல் நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் பெரிய நாடுகளோடு வரிவிதிப்பு யுத்தத்தைப் பிரகடனப்படுத்தி வந்த ட்ரம்ப் நிர்வாகம், இப்போது நொந்து நொடித்துப்போன இலங்கை போன்ற நாடுகள் மீதும் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா விடமிருந்து அதிக அளவில் இறக்குமதியை செய்யாத நாடுகளில் இருந்து தனது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதீத வரியை அறிவித்திருக்கிறது ட்ரம்பின் நிர்வாகம்.
அனை த்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத வரியை விதித்து இருக்கும் அமெரிக்கா, டசின் கணக்கான பிற நாடுகளுக்குப் பரஸ்பர வரியை அதிகரித்து இருக்கிறது. குறிப்பா க அமெரிக்காவுடனான வர்த்த கத்தில் அமெரிக்க பொருள்களை அதிகம் இறக்குமதி செய்யாமல், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கண்மூடித்தனமான வரி அதிகரிப்பை அமெரிக்க அறிவித்துள்ளது.
இலங்கை தனது மொத்த ஏற்றுமதியில் கால்பங்கை - 25 வீதத்தை - அமெரிக்காவுக்குத்தான் அனுப்புகிறது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள உயர்ந்த வரி விகிதங்களில் ஆறாவது இடத்தை இலங்கை எதிர்கொள்கின்றது.
புதிய வரி விதிப்பின்படி 49 சதவீதத்தில் கம்போடியா மிக உயர்ந்த வரியை எதிர்க்கொள்கிறது. அதைத் தொடர்ந்து வியட்நாம் 46 சதவீதத்திலும், இலங்கை 44 சதவீதத்திலும், சீனா 34 சதவீதத்திலும் உள்ளன. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அறிவித்திருக்கின்றார்.
எதிர்பாராதவிதமான இந்த அதிரடியான அதிக வரி விகிதங்கள் நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகள் பலவற்றையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. டிரம்ப் தமது இந்த நடவடிக்கையை பொருளாதார சுதந்திரத்தின் பிரகடனம்’ என்று விவரிக்கின்றார்.
அமெரிக்காவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியை சமன் செய்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக அவர் தமது இந்த அதிரடி நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கின்றார்.
இந்த விரிவான வரி விதிப்புகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புகின்றன எனவும், உலகளாவிய ஒழுங்கை வடிவமைத்த பல தசாப்தகால வர்த்தக தாராள மயமாக்கலை சிதறடிப்பனவாகவும் அமைந் துள்ளன என பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளினால் எழுந்துள்ள கவலைகள் ஏற்கனவே உலகெங்கிலும் உற்பத்தி நடவடிக்கைகளை மந்தப்படுத்தியுள்ள அதே நேரத்தில், விலைகள் உயரும் முன் பொருள்களை கொள்முதல் செய்ய நுகர்வோர் விரைவதால் அமெரிக்காவில் இறக்குமதி செ ய்யப்பட்ட பொருள்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
டரம்ப் அதிரடியாக - எதேச்சா திகாரமாக - அமெரிக்கத் தரப்புக்கே உரித்தான மேலாதிக்கக் கர்வத்தோடு – உலகின் மீது தொடுத்திருக்கும் இந்த வர்த்தகப் போர், நலிவுற்ற நாடுகளின் அப்பாவி நுகர்வோரைப் பெரிதும் பாதிக்கப்போகின்றது என்பதுதான் இதில் உள்ள பெரும் துன்பியல் துரதிர்ஷ்டமாகும்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தை மெதுவாக்கும். மந்தநிலையின் அபாயத்தை அதிகரிக்கும். அதேச மயம் சராசரி அமெரிக்க குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளை ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகரிக்கச் செய்யும் என்றும் கூட பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்பின் திருக்கூத்தின் உள்நோக்கம் குறித்து சர்வதேசப் பொருளாதார நிபுணர்களே குழம்பி நிற்கின்றனர் என்பதுதான் இதில் உள்ள அடுத்த ஆச்சரியமாகும்.
-முரசு ஆசிரியர் தலைங்கம்