குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க இன்று காலை சென்றிருந்த முன்னாள்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அவரிடமிருந்து 5½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
2023ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே, முன்னாள் அமைச்சர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்றிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு, வெலிகம பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவாக, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் வாரக் கணக்கில் தலைமறைவாகி இருந்தார். பின்னர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.