தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் ஆறு மாதங்கள் பூர்த்தியாகின்றன.
நிர்வாகக் கட்டமைப்பு மாற்றங்கள் உட்பட பல்வேறு ஆட்சி முறை மாற்றங்களும் அதிரடி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று ஆரவாரமாகப் பிரச்சாரம் செய்து, அவற்றின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெருவெற்றியீட்டி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, கடந்த இந்த ஆறு மாத காலத்தில் வாய்ச்சவடாலைத் தொடர்ந்தும் அரங்கேற்றியமையைத் தவிர வேறு எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.
கடந்த காலத்தில் அரசியல் ஊழல்கள், நிதி மோசடிகள், நிர்வாகக் குளறுபடிகள் போன்றவற்றில் ஈடுபட்ட பிரதிநிதிகளை இழுத்து, வந்து சிறையில் அடைத்து, அவர்களிடம் இருந்து அவர்கள் கொள்ளையிட்ட நாட்டின் வளத்தை மீட்போம் என்றார்கள். நடக்கவில்லை.
ஊழலை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. ராஜபக் ஷ குடும்பம் திருடிக் கொண்டு உகண்டாவுக்கு கொண்டு சென்ற பணத்தை மீட்போம் என்றார்கள். நடக்கவே இல்லை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றீடின்றி ஒழிப்போம் என்றார்கள். இப்போது மாற்றுச் சட்டம் பற்றி பேசுகிறார்கள். அதுவும் கூட வெறும் பேச்சளவில்தான். இணைய வழிப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தவறுகளை திருத்தி அமைப்போம் என்றார்கள். அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆட்சி முறைமை மாற்றத்திற்காக அரசமைப்பை மாற்றி அமைப்போம் என்றார்கள். அதை இப்போது மூன்று ஆண்டுகள் தள்ளிப் போட்டு விட்டார்கள் எனக் கூறுகிறார்கள். ஓர் அரசின் ஆட்சி அதிகாரத்தின் முடிவில் அரசமைப்பு மாற்றம் என்பது பெரும்பாலும் சாத்தியப்படாத விடயம்.
ஆகையினால் 'ஆறிய கஞ்சி பழங்கஞ்சி' என்ற மாதிரி இந்த அதிகார பீடத்தின் கீழ் அரசமைப்பு மாற்றமும் உருப்பட போவதில்லை என்பதும் ஓரளவு தெளிவாகிவிட்டது.
புதிய அரசமைப்பு உருவாகும் வரை 13ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் பூரண நடைமுறையாக்கத்தோடு மாகாண சபை முறைமை முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றார்கள். கடந்த ஆறு மாதத்தில் அது தொடர்பில் உருப்படியாக எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இன்னும் சற்றுக் காலம் உருட்டி விட்டு, புதிய அரசமைப்பின் கீழ்தான் மாகாண அதிகாரப் பகிர்வு நடைமுறையாக்கம் என்று சொல்லி காலத்தை இழுத்தடிக்க போகின்றார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
மின்சாரக் கட்டணம் குறையும் என்றார்கள். போகிற போக்கில் அது எகிறும் சாத்தியமே தென்படுகின்றது. அரிசி மாபியாவை ஒழிப்பார்கள் என்றார்கள். ஆனால் அரிசித் தட்டுப்பாடு, விலை உயர்வு என்பன தவிர்க்க முடியாத கட்டாயமாகி வருகின்றன.
குறிப்பிடத்தக்க நேரடி வெளிநாட்டு முதலீடு எதுவுமே கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அந்நிய செலாவணி கையிருப்பை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி பொருளாதார விருத்தி என்றார்கள். அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. மாதந்தோறும் உள்நாட்டு கடன் பல்லாயிரம் கோடி ரூபா பெறப்பட்டு வருவதாக ஓர் அதிர்ச்சிச் செய்தி உண்டு. அவை ஒன்று சேர்ந்து கழுத்தை நெரிக்கும்போது அதனை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார உடன்பாட்டு ஏற்பாடுகளை மறுசீரமைப்போம் என்றார்கள். இப்போதும் ரணில் அரசு கொண்டு வந்த திட்டத்தின் தடத்திலிருந்து மாற முடியாதவர்களாக தொடர்ந்து அந்தப் பாதையில் பயணிக்கின்றார்கள்.
முன்னைய ஆட்சிக்கால ஊழல், மோசடி பேர்வழிகளை பாதுகாக்கும் போக்கு தொடர்கின்றது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் சவடால் பேச்சும் காற்றில் பறந்து விட்டது.
ஒட்டுமொத்தத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கியமையைத் தவிர, வேறு எதையும் செயலில் அநுர குமார திஸநாயக்கவின் தலைமைத்துவம் வழங்கவே இல்லை என்பதுதான் ஆறு மாத காலப் பட்டறிவு.
-முரசு ஆசிரியர் தலையங்கம்