Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அனுமதியின்றி ‘முதியோர் இல்லங்களை’ நடத்த முடியாது!

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2026 • 5:34 AM

அனுமதியின்றி ‘முதியோர் இல்லங்களை’ நடத்த முடியாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய, தேசிய முதியோர் செயலகத்தின் முதியோருக்கான தேசிய சபையின் பரிந்துரை இன்றி எந்தவொரு முதியோர் இல்லத்தையும் கொண்டு நடத்த முடியாதவாறு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அதன் பணிப்பாளர் கே.
  • ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களைத் தரிக்கவைத்து பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு இதுவரை 136 முதியோர் இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
  • தற்போது முதியோர் இல்லத்தைப் பதிவு செய்வதற்கான அடிப்படை வழிகாட்டிக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முதியோர் இல்லங்களை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய 09 முக்கிய அளவுகோல்களை முன்வைத்தார்.
  • அரை நகர்ப்புற அல்லது நகர்ப்புறங்களில் அமைப்பதாக இருந்தால் 40 பேர்சஸிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

இதற்கமைய, தேசிய முதியோர் செயலகத்தின் முதியோருக்கான தேசிய சபையின் பரிந்துரை இன்றி எந்தவொரு முதியோர் இல்லத்தையும் கொண்டு நடத்த முடியாதவாறு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்தார்.

ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களைத் தரிக்கவைத்து பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு இதுவரை 136 முதியோர் இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது தெளிவான ஏற்பாடுகள் இல்லாததால், அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கும், அதனூடாக முதியோர் இல்லப் பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான புதிய விதிகள் மற்றும் கட்டளைகளை இந்த ஆண்டில் வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

தற்போது முதியோர் இல்லத்தைப் பதிவு செய்வதற்கான அடிப்படை வழிகாட்டிக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முதியோர் இல்லங்களை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய 09 முக்கிய அளவுகோல்களை முன்வைத்தார். அவை வருமாறு:

நிலப்பரப்பு: கிராமப்புறங்களில் முதியோர் இல்லங்களை அமைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இருக்க வேண்டும். அரை நகர்ப்புற அல்லது நகர்ப்புறங்களில் அமைப்பதாக இருந்தால் 40 பேர்சஸிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

வெளிப்புற நடவடிக்கைகள்: தங்கியிருக்கும் முதியோர்களின் வெளிப்புற செயற்பாடுகளுக்காக மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

அனுமதி: முதியோர் இல்லத்தை அமைப்பதற்கு பிரதேச சபை/ மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.

ஆராய்ச்சி நிறுவனப் பரிந்துரை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரையைப் பெற வேண்டும்.

வாடகை ஒப்பந்தம்: குத்தகை அடிப்படையில் நடத்தப்படுவதாயின், அந்த குத்தகை ஒப்பந்தம் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் நீண்டகால ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.

தரக்கட்டுப்பாடு: முதியோர் இல்லத்தின் அனைத்து கட்டுமானங்களும் "முதியோர் பராமரிப்பு இல்ல" தரநிலைகளுக்கு இணங்க அமைதல் வேண்டும்.

பசுமைக் கட்டடக் கோட்பாடு: பசுமைக் கட்டடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய நிலப்பரப்பு மற்றும் கட்டிடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

மாற்று சக்தி: முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

இடமாற்றம்: தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலோ அல்லது புதிய பகுதிகளை இணைத்தாலோ, அது குறித்து பிரதேச செயலாளர் ஊடாக தேசிய முதியோர் செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

முதியோர் சட்டத்தைத் திருத்தி, இல்லங்களில் இடம்பெறும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுகாதார அமைச்சு, முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாகாண சபைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை நடத்துபவர்களின் கருத்துக்கள் இந்தச் சட்டவாக்கச் செயன்முறையில் உள்வாங்கப்படும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

முதியோர் செயலகப் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"சமூக சேவை என்ற போர்வையில் பல்வேறு அறக்கட்டளைகளை உருவாக்கி சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்."

"எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி 456 முதியோர் இல்லங்கள் உள்ளன. பதிவாகாத இல்லங்கள் மேலும் 100 வரை இருக்கலாம். இவற்றில் மொத்தமாக சுமார் 15,000 முதியோர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் தாயாரே அதிகளவில் உள்ளனர். இவை தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இல்லங்கள் தொடர்பில் விதிகள் உள்ளன.

ஆனால், பதிவு செய்யப்படாவிட்டால் விதிக்கப்பட வேண்டிய தண்டனை என்ன என்பது இதுவரை தெளிவாக இல்லை. எனவே, புதிய திருத்தத்தில் அந்தப் பகுதிகளைச் சரியாக உள்வாங்குவோம். சில முதியோர் இல்லங்களில் மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகிறது. பாவம் அந்த அப்பாவி மக்கள்; சமூக சேவை என்று கூறிக்கொண்டு பல்வேறு அமைப்புக்களை உருவாக்கிச் சிலர் பெரியளவில் மோசடி செய்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...