மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று (14) மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (15) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தீவிரமாக காணப்படுவதுடன், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அது இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினாலான பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் சுமார் 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 38 நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை குறித்த முழுமையான விபரம் பின்வருமாறு:
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது. இந்த அறிவித்தல் இன்று (14) மாலை 04.00 மணி முதல் நாளை (15) மாலை 04.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.
மட்டம் 2 (அவதானமாக இருக்கவும்):
பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
காலி: நெலுவ
களுத்துறை: அகலவத்தை, பதுரலிய, மத்துகம, ஹொரண மற்றும் வலல்லாவிற்ற
குருணாகல்: அலவ்வ
இரத்தினபுரி: பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி
மட்டம் 1 (விழிப்புடன் இருக்கவும்):
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, காலி, களுத்துறை, மாத்தளை, மொனராகலை, குருணாகல், கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டியின் உடநுவர, யட்டிநுவர, கங்கவட்ட கோரலே மற்றும் கேகாலையின் மாவனல்ல, வரக்காபொல போன்ற பல பகுதிகள் இதில் உள்ளடங்குகின்றன.
சீரற்ற வானிலையால் சுமார் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் 8 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 19 பிரதான நீர்த்தேக்கங்களும் 19 நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன.
அநுராதபுரம் - ராஜாங்கனை, பதுளை - அம்பேவெல, அம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் இதில் அடங்கும்.
எனவே நீர்நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்மித்து வாழும் மக்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


