பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விபரம் கீழே தரப்பட்டுள்ளது:
இலங்கை மின்சார சபையினால் (CEB) உரிய காலப்பகுதிக்குள் முறையான கட்டணத் திருத்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முறையான முன்மொழிவு குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாமை, ஆரம்ப முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் இந்த காலாண்டின் எஞ்சியுள்ள குறுகிய காலப்பகுதிக்குள் புதிய திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படக்கூடிய அதிகப்படியான கட்டண மாற்றங்கள் (அதிகரிப்பு) போன்ற பாதகமான காரணிகளைக் கருத்திற் கொண்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த வருடத்தின் (2025) நவம்பர் 14ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. எனினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29ஆம் திகதியே சமர்ப்பித்தது.
அந்த முன்மொழிவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக, முறையான புதிய முன்மொழிவை 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனவரி 5ஆம் திகதி ஆணைக்குழு அறிவித்தது.
ஆயினும், திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க மேலும் தாமதமாகும் என மின்சார சபை ஜனவரி 8 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு அறிவித்தது. இதுவரையில் திருத்தப்பட்ட முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை. அவ்வாறு முன்மொழிவு கிடைத்தாலும், அதனை மீளாய்வு செய்து மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், முதல் காலாண்டின் இறுதிக் காலப்பகுதியிலேயே அதனை நடைமுறைப்படுத்த முடியும்.
குறுகிய காலப்பகுதியொன்றிற்காக வருமானம் மற்றும் செலவு மாற்றங்களை ஈடுசெய்ய முற்படும்போது, மின்சாரக் கட்டணம் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறுபடக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது. இது தேசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
செல்லுபடியாகும் கட்டணத் திருத்த முன்மொழிவு உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாமை மற்றும் குறுகிய காலத்திற்காக கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் கருத்திற் கொண்டு, முதல் காலாண்டில் மின்சாரக் கட்டண மாற்றங்களைச் செய்யாதிருக்க ஆணைக்குழு தீர்மானித்தது.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை 2026 பெப்ரவரி 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.


