தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார
திசாநாயக்க ஜனாதிபதி பதவியை ஏற்றது முதல் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதையிட்டு எமது மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
யார் ஜனாதிபதியாக இருக்கிறாரோ அவரோடு முரண்படாமல் இருப்பதே சிறுபான்மை மக்களுக்கு நல்லது என்பதே எமது கட்சி கொள்கையாகும். இதனை நாம் சொல்லிலும் செயலிலும் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தேர்தல் என்று வருகின்ற போது ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கலாம். அது ஜனநாயகம் தந்த உரிமை. ஆனால் ஒருவர் வெற்றிபெற்ற பின் அவரோடு கைகுலுக்கிக்கொள்வதே சிறந்த பண்பாகும். இந்த வகையில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமாரவின் நல்ல திட்டங்களுக்கும் ஊழல் ஒழிப்புக்கும் உலமா கட்சி முழு ஒத்துழைப்பும் வழங்கும்.
இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்க வேண்டும் என்ற மனோ நிலை மக்களிடம் இருந்ததால் அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது மக்களின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறுவதாகவே தெரிகிறது.
நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில்தான் ஊழல்களும் மோசடிகளும் அதிகம் உள்ளன. அத்தகைய ஊழல் மாபியாக்கள் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு தெரிகிறது. இதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் இலங்கை மக்கள் முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.