-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இசைக்கலைஞர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு பிணை அனுமதி.
-
PTAவிற்குப் பதிலாக தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆம் பிரிவின் கீழ் 'அரசதுரோக' குற்றச்சாட்டைச் சுமத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்.
-
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பாடல் பாடிய குற்றச்சாட்டின் கீழ் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவின் கீழ் "அரசதுரோக" குற்றச்சாட்டுகளைச் சுமத்துமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டிருந்த தமிழ் ரெப் (சொல்லிசை) பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு சாவகச்சேரி நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (12) பிணை வழங்கியுள்ளார்.
முப்பதாண்டு கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பாடல் ஒன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சி, உதயநகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் தமிழ் இசைக்கலைஞரான கணேஷ்குமார் சங்கீதன் கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 வருட கால யுத்தத்தில் மடிந்தவர்களை நினைவு கூர்ந்து பாடல் பாடியமைக்காகவே இந்த 24 வயதுடைய தமிழ் இசைக்கலைஞர் கிளிநொச்சி பொலிஸாரால் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.



