சட்டம்' (PSTA), தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்படுமானால், அது நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை கடுமையாக சீர்குலைப்பதுடன், சர்வதேச மட்டத்தில் இலங்கை பாரிய பொருளாதாரப் பின்னடைவுகளையும் எதிர்நோக்க நேரிடும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலமானது, "நாட்டில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தானது" என வர்ணித்தார். "இது ஜனநாயக உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டத்தின் பாதிப்புகள் உள்நாட்டு நிர்வாகத்துடன் மட்டும் நின்றுவிடாது என அவர் எச்சரித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை உள்ளிட்ட பல சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதன் மூலமே குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை அடைந்து வருகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"GSP+ என்பது ஒரு பரிசோ அல்லது உரிமையோ அல்ல. குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டே அது தற்காலிகமாக வழங்கப்படுகிறது," என்று கூறிய அவர், ஐரோப்பிய சந்தைக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கிடைக்கும் இந்த வரிச்சலுகை எக்காரணம் கொண்டும் ஆபத்துக்குள்ளாக்கப்படக் கூடாது எனவும், பொருளாதாரத்தைப் பாதுகாக்க இந்த சட்டமூலத்தில் பாரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சாதாரண சட்டங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில் விசேட சட்டங்கள் தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லை என்பதே அதன் அடிப்படை குறைபாடு என வாதிட்டார்.
"தற்போதைய சட்டத்தின்படி, பயங்கரவாதச் செயல்கள் என 13 பிரதான பிரிவுகள் உள்ளன. ஆனால் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்குத் தெளிவான விளக்கம் இல்லை. இது மிகவும் தெளிவற்றதாகவும், எதேச்சதிகாரமாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளது," என்றார். மேலும், சாதாரண பிரஜைகளை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் இச்சட்டம் விரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனிநபர்களைச் சோதனையிடவும், வீடுகளுக்குள் நுழைந்து இரகசிய ஆவணங்களைக் கைப்பற்றவும் ஆயுதப் படைகள், பொலிஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களையும் பேராசிரியர் பீரிஸ் கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரு வருடம் வரை தடுத்து வைக்கும் கட்டளையை (Detention Order) பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியலில் இருக்க வேண்டிய ஒருவரை, விசாரணைக்காக பொலிஸ் காவலுக்கு மாற்றவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பான சரத்துகள் "மிகவும் ஆபத்தானவை" என விவரித்த அவர், ஜனாதிபதி ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் எந்தவொரு அமைப்பையும் சட்டவிரோதமானது என அறிவிக்க முடியும் என்றார். அவ்வாறு தடை செய்யப்படும் அமைப்பு உறுப்பினர்களைச் சேர்க்கவோ, கூட்டங்களை நடத்தவோ அல்லது வங்கிச் கணக்குகளைப் பராமரிக்கவோ முடியாது. ஜனாதிபதியினால் அந்தத் தடை நீக்கப்படும் வரை அது அமுலில் இருக்கும்.
மேலும், ஜனாதிபதி எந்தவொரு இடத்தையும் 'தடைசெய்யப்பட்ட பிரதேசம்' என அறிவிக்க முடியும். அங்கு நுழைவதற்கோ, புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கோ தடை விதிக்கப்படும். இதனை மீறுவோருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 30 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படலாம்.
1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் 1982 இல் நிரந்தரமாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 'பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு' (PTA) பதிலாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. எனினும், 1979 ஆம் ஆண்டு சட்டத்தை விடவும் இந்த புதிய வரைபு மிகவும் ஆபத்தானது என பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.
"இது ஜனநாயகத்தின் மீதான ஒரு பாரிய தாக்குதல்," எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பயங்கரவாதம் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த காலத்திலேயே PTA கொண்டுவரப்பட்டது எனக் குறிப்பிட்டார். "இப்போது நமக்குத் தேவை மக்கள் நலன் சார்ந்த சட்டமே" என அவர் கூறினார். அதேவேளை, இந்தச் சட்டம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட பிரஜைகளின் சுதந்திரத்தைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.


