உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக, பொது நிர்வாக அமைச்சினால் நீதி அமைச்சுக்குக் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை வியாழக்கிழமை (பெப்ரவரி 12) நேரில் சென்று பார்வையிட்ட போதே அமைச்சர் இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.
ஊழல் எதிர்ப்புச் செயற்திட்டத்தின் (2025-2029) ஒரு அங்கமாக, நீதிமன்றக் கருமங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய நான்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதி அமைச்சுக்குத் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பு 07, கிரெகரி வீதி (இல. B/88); பௌத்தாலோக்க மாவத்தை (இல. C/76); விஜேராம வீதி (இல. B/108) மற்றும் ஸ்டான்மோர் கிரசன்ட் (இல. B/12) ஆகிய இடங்களில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் (இல. C/76) அமைந்துள்ள இல்லத்தில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்காக ஏற்கனவே விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் மேலதிகமாகத் தேவைப்படும் வசதிகளை விரைவாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
அத்துடன், ஏனைய மூன்று இல்லங்களிலும் நீதிமன்றங்களை நிறுவுவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, புதுக்கடை (Hulftsdorp) நீதிமன்றக் கட்டடத் தொகுதித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியையும் நீதியமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக, உயர் நீதிமன்றக் கருமங்கள் தற்காலிகமாக இந்த நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலேயே நடைபெற்று வந்தன.
தற்போது உயர் நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, அங்கு வழக்கு விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதித்துறை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஐந்து புதிய மேல் நீதிமன்றங்களை நிறுவுவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கள விஜயத்தின் போது நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


