ஒன்று என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சபாரத்தினம் நகுலேஸ்வரன் என்பவரின் மரணத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே காரணம் என மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
வலது காலில் கருநிறமடைந்த தொற்றுக்குள்ளான காயம் காணப்பட்டதாக, மேலதிக சட்ட மருத்துவ நிபுணர் சதாசிவம் ரவீந்திரன், நீதவான் ரெக்ஸி கொட்வின் பியதாஸவிற்கு அனுப்பிய மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "சிறைச்சாலை வைத்தியசாலையில் உடனடி மற்றும் முறையான கவனிப்பு வழங்கப்படவில்லை என நெருங்கிய உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்" என்றும் அவர் அதில் எழுதியுள்ளார்.
59 வயதான சபாரத்தினம் நகுலேஸ்வரன், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 டிசம்பர் 10ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 2026 ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
சபாரத்தினம் நகுலேஸ்வரன் ஒரு நீரிழிவு நோயாளி எனத் தெரிவிக்கும் உறவினர்கள், அவர் சிறையிலடைக்கப்பட்ட நாள் முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை தினமும் குடும்ப உறுப்பினர்கள் அவரைப் பார்க்கச் சென்றதாக ஊடகவியலாளர்களிடம் கூறினர். டிசம்பர் 26ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்றபோது, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, அவரது கால்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நீரிழிவு நோயாளி என்பதால் அவர் எப்போதும் மருத்துவ அறிவுரைப்படி சப்பாத்து அணிந்திருந்ததாகவும், சிறையில் அவருக்கு செருப்பு வழங்கப்பட்டதால் கால்களில் காயம் ஏற்பட்டு, அது தொற்றாக மாறியதன் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
டிசம்பர் 27 முதல் 29 வரையான காலப்பகுதிக்குள் அவர் உயிரிழந்த செய்தியை சிறைச்சாலை அதிகாரிகள் உறவினர்களுக்கு அறிவித்ததுடன், டிசம்பர் 30 ஆம் திகதி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
"அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். இது மருத்துவர்களினதும் சிறைச்சாலையினதும் அலட்சியமாகும். ஒரு உயிரைத் திரும்பக் கொடுக்க முடியுமா? அந்தப் பிள்ளைக்குத் தந்தையையோ, மனைவிக்கு கணவனையோ திரும்பக் கொடுக்க முடியுமா?" என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சபாரத்தினம் நகுலேஸ்வரனின் இறுதிக்கிரியைகள் 2025 டிசம்பர் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.


