எவ்வளவு காலம் காத்திருந்தார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஸ்டாலின் தி.மு.க-வைக் கைப்பற்றவில்லை. அவர் பல தசாப்தங்களாக கட்சிக்குள் இருந்து, கிளர்ச்சி செய்யாமலும், கட்சியை உடைக்காமலும் அதிகாரத்திற்கு வந்தார்.
தனது தந்தை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம். கருணாநிதியின் அதிகாரத்திற்குப் பகிரங்கமாக சவால் விடாமல், மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர் அந்த இடத்திற்கு முன்னேறினார்.
ஸ்டாலினின் எழுச்சியானது பொறுமையானது, ஒழுக்கமானது மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்டது. அதனால்தான் திங்கட்கிழமை கிடைத்த மக்கள் தீர்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு மிகவும் கொடூரமான ஒன்றாகத் தெரிந்தது.

கொளத்தூர் தோல்வி...
தி.மு.க மாநில அதிகாரத்தை இழந்ததை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், 2011 முதல் தனது கோட்டையாக விளங்கிய கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் தோல்வியடைந்தமை, இது ஒரு சாதாரண ஆட்சி எதிர்ப்பு அலையையும் தாண்டிய ஒன்று என்பதைக் காட்டுகிறது.
2021-ல் பெரும் வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்ற அதே தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வி.எஸ். பாபுவிடம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியடைந்தார். ஒரு முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைவது தமிழக அரசியலில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.
தோல்வியை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின்: தி.மு.க-வின் வீழ்ச்சிக்கான பின்னணி
முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிரேஷ்ட அமைச்சர்களான துரைமுருகன், பி. கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், நாசர், மதிவேந்தன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் இத்தேர்தலில் தோல்வியடைந்தனர்.
ஸ்டாலினின் உருக்கமான பதிவு:
“மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்கி அதனை ஏற்றுக்கொள்கிறோம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்!” என ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:
“கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் பல திட்டங்களைச் செயல்படுத்தினோம். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் உயர்த்தினோம். எமது சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை முன்வைத்தே மக்களிடம் வாக்குக் கேட்டோம். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களின் நலனுக்காகவும் சேர்த்தே மாநிலத்தை ஆட்சி செய்தேன். எனது மனசாட்சிக்கு இணங்கச் செயல்பட்டேன். எனது சக்திக்கு மீறி உழைத்தேன்.”
ஸ்டாலினின் இந்த வார்த்தைகளில் தோல்வியின் வலி தெரிந்தாலும், “வெற்றி தோல்வியை விட எமது கொள்கைகளும் முன்னுதாரணங்களுமே முக்கியம் என நம்புகிறேன். தி.மு.க-வின் அரசியல் பயணம் இதோடு முடிந்துவிடாது. மக்களுக்காக ஒரு சிறந்த ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க, இனி ஒரு சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும்,” என அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கான காரணங்கள்:
ஸ்டாலின் அரசாங்கத்தின் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொலிஸ் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகள், நிர்வாகத் தோல்விகள், தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் அரச இயந்திரத்தைச் சரியாகக் கையாள முடியாமை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், இவை மட்டுமே இவ்வளவு பெரிய மக்கள் நிராகரிப்பிற்குப் போதுமான காரணங்கள் அல்ல.
பெரிய அளவில் மக்கள் கோபம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், ஊழல் குறித்த ஒரு கருத்து (Perception) மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருந்தது. அது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும், மக்கள் அதனை நம்பினர். தமிழக அரசியலில், ஆவணங்களை விட மக்களின் கருத்துக்களே வேகமாகப் பரவுகின்றன.

மதுக்கடைகளில் '10 ரூபாய்' விவகாரம்:
விஜய்யின் தேர்தல் பிரசாரத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் வசூலிக்கப்படும் "மேலதிக 10 ரூபாய்" குறித்த குற்றச்சாட்டு முக்கிய பேசுபொருளானது. இது முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டது.
டாஸ்மாக் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடப்பதாக அ.தி.மு.க முன்னரே குற்றம் சாட்டியிருந்தது, ஆனால் பாலாஜி அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும், இந்தச் சிறிய விடயம் சாதாரண மக்கள் மத்தியில் தி.மு.க-விற்கு எதிரான ஒரு பெரிய மனநிலையை உருவாக்கியது.
"10 ரூபாய் அமைச்சர்" மற்றும் ஸ்டாலின் குடும்பம் மீதான விமர்சனங்கள்
கரூர் பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்றிய போது, செந்தில் பாலாஜியை "10 ரூபாய் அமைச்சர்" என விமர்சித்தமை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. இதனுடன் இணைந்து, ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருக்கமான அதிகார மையங்கள், அவர்களது துபாய் விஜயங்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வணிக வலையமைப்புகள் குறித்த பேச்சுகளும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவின.
இக்கதைகளில் சில முற்றிலும் பொய்யானவையாக இருக்கலாம்; சில வெறும் சந்தேகங்களாக இருக்கலாம்; சிலவற்றில் உண்மையும் கலந்திருக்கலாம். ஆனால், தேர்தல் ரீதியாகப் பார்த்தால், அந்தச் செய்திகள் மக்களின் மனதிற்குள் ஊடுருவிவிட்டன என்பதே முக்கியமானது.
தி.மு.க-விற்கு இது புதிய ஒன்றல்ல. ஜெயலலிதாவின் காலத்தில் அ.தி.மு.க-வும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தது. எனவே, தாம் மட்டுமே இவ்வாறான விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை என தி.மு.க நினைத்திருக்கலாம்.

தலைவரின் பிம்பமும் குடும்பத்தின் தாக்கமும்:
ஸ்டாலின் ஒருபோதும் ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு தலைவராகத் தெரிந்ததில்லை. வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வர்ணமயமான தனிப்பட்ட வாழ்க்கைக்காக அவர் அறியப்பட்டவருமல்ல. இருப்பினும், அவரது அந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளுமையானது, அவரது மகன் மற்றும் மருமகன் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியில் இருந்து அவரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.
உதயநிதி ஸ்டாலினின் பிம்பமும் வாரிசு அரசியலும்
ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் தி.மு.க-விற்கு ஒரு பாரமாகவே அமைந்தது. அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட போதிலும், அவரது அரசியல் வளர்ச்சி கட்சியின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய சேதத்தை அதனால் ஈடுசெய்ய முடியவில்லை.
விமர்சகர்களின் பார்வையில், உதயநிதி 'தகுந்த உழைப்பின்றி அதிகாரம் மற்றும் பணத்தைப் பரம்பரையாகப் பெற்ற ஒரு நபராகவே' பார்க்கப்பட்டார். 'சநாதன தர்மம்' குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தினால் அது வெறுப்புப் பேச்சாகவும் விமர்சிக்கப்பட்டது.
இது எதிர்த்தரப்பினருக்கு ஒரு பலமான அரசியல் ஆயுதமாக அமைந்தது. தி.மு.க-வின் புதிய தலைமுறை, மத நம்பிக்கைகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அவற்றை அவமதிப்பதாகக் குற்றம் சாட்ட அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

குடும்ப அரசியலுக்கு எதிரான தீர்ப்பு
இறுதியில், இது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சாதாரண வாக்குப்பதிவு மட்டுமல்ல; இது பழகிப்போன அதிகாரத்திற்கு எதிரான வாக்குகளாகும். வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள், அகந்தை மற்றும் வெறும் நலத்திட்டங்கள் மட்டுமே மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தப் போதுமானது என்ற நம்பிக்கைக்கு எதிரான தீர்ப்பாகும்.
தி.மு.க தன்னை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பினால், இத்தகைய கடினமான கேள்விகளையும் அதற்கான இன்னும் கடினமான பதில்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்டாலின் அதிகாரத்தைப் பெறுவதற்குப் பல தசாப்தங்களாகக் காத்திருந்தார். ஆனால், அந்த வாரிசு அதிகாரமானது எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்ட விஜய்க்கு ஒரே ஒரு தேர்தல் மட்டுமே போதுமானதாக இருந்தது.


